Is the Union government an empire that ignores disaster?

பேரிடரையும் புறக்கணிக்கும் பேரரசா ஒன்றிய அரசு?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை Is the Union government an empire that ignores disaster?

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது என்று சொலவடையாகக் கூறுவார்கள். தமிழ்நாடு சந்தித்த கடும் இயற்கைப் பேரிடர்களுக்கான கூடுதல் நிவாரண நிதி கோரிக்கை குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய ஆணவப்பேச்சு அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களைக் குறித்து எந்த கவலையும் இல்லாத, கருணையும் இல்லாத ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சு ஆட்சியாளர்களின் மமதை எந்த அளவு செல்லும் என்பதையே காட்டுகிறது. இத்தனைக்கும் அவர் தப்பும், தவறுமாகப் பேசினாலும், தமிழிலேயே பேசியதுதான் மக்களின் வேதனை அதிகரிக்கக் காரணம்.

வரலாறு காணாத, வானிலை ஆய்வுகளின் கணிப்புகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட கடும் மழைப்பொழிவுகள் தலைநகர் சென்னையையும், அதை அடுத்து தென் மாவட்டங்களையும் நிலை குலையச் செய்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், அயரா களப்பணியாலும் மக்களை ஒட்டுமொத்த பாதிப்பிலிருந்து கூடியவரை காத்துள்ளது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாட்டு அரசாங்கம். ஆனாலும் இயற்கைப் பெருஞ்சீற்றம் மக்களின் வாழ்வினை சீர்குலைத்துள்ளது.

வழமையான பருவ கால மழை, வெள்ளம், புயலைத் தாண்டிய இந்த கடும் பேரிடரின் தாக்கத்தை எதிர்கொண்டு மீட்பு பணி செய்ய கூடுதல் நிவாரண நிதி கேட்டு ஒன்றிய அரசை அணுகியது தமிழ்நாடு அரசு. உடனடியாக 2,000 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிதியிலிருந்து இடைக்கால நிவாரணமாக ஒதுக்கச் சொல்லி கோரியது.

இது தேசிய பேரிடர் நிவாரண நிதி உருவாக்கப்பட்டதற்கான மூலகாரணத்தை ஒட்டிய கோரிக்கையாகும். இது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டதோ, தேசிய பேரிடர் நிதியின் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டதோ அல்ல. அந்த நிதியின் நோக்கமே வழக்கத்தை விட கடுமையான இயற்கைச் சீற்றங்களை மாநிலங்கள் சமாளிக்க கூடுதல் நிதியைத் தருவதுதான்.

பிறகு எந்த காரணத்தால் ஒன்றிய நிதியமைச்சர் கடும் சொற்களைப் பேச வேண்டும்? ஏன் அமைச்சர் உதயநிதி அமைச்சரின் மரியாதைக்குரிய அப்பா வீட்டு சொத்தை கேட்கவில்லை என்று காட்டமாகச் சொல்ல நேர்கிறது? ஏன் தினமலர்  நாளிதழ் உதயநிதி காசுக்காக நிர்மலா சீதாராமனிடம் கையேந்துவதாக கேலிச்சித்திரம் வரைகிறது?

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றிய அரசிடம் குவிந்துள்ள அதிகாரம் அதனை கூட்டாட்சி குடியரசாக உணரச்செய்யாமல் ஒரு பேரரசாக உணரச் செய்வதுதான் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. இது சாதாரணமாக கூட்டாட்சிகளில் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல் போன்றதல்ல. கூட்டாட்சி தத்துவத்தையே குழிதோண்டிப் புதைக்கக் கூடிய பாஜக அரசாங்கத்தின் ஆணவமாகும். பிரச்சினையை விரிவாக அலசுவோம்.

தேசியப் பேரிடர் நிதியும், மாநிலப் பேரிடர் நிதியும்

அரசின் எல்லா நிதிகளும் வரி வசூல் மூலமாகவே உருவாகிறது என்பது வெளிப்படையானது. அதாவது மக்களின் வரிப்பணமே அரசின் மூலாதாரம். இந்திய ஒன்றியத்தைப் பொறுத்தவரை வருமான வரி என்பது ஒன்றிய அரசினால் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. விற்பனை வரி விதிப்பு மாநிலங்களிடம் இருந்தது, சமீபத்தில் GST என்ற வடிவில் ஒன்றிய அரசினால் வசூலிக்கப்பட்டு பின்னர் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

எனவே வரி வருவாய் என்பதில் மாநில அரசுகளுக்கென தனியான வரி விதிப்பு வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஒரு சில அம்சங்கள் மட்டுமே அதன் வருவாய்க்கு வழியாக உள்ளன. மாநில அரசு ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வையே பெருமளவு சார்ந்துள்ளது. ஆனால் வரி செலுத்தும் மக்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களில்தான் வாழ்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

இந்த நிலையில் இயற்கைச் சீற்றம், பேரிடர்களின் தாக்கத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மாநில அரசுகளின் பொறுப்பாகவே உள்ளது. ஒன்றிய அரசு தேசிய பேரிடர் நிதி (National Disaster Response Fund) என்று ஒன்றை செஸ் என்ற கூடுதல் வரிகளை ஒரு சில பொருட்கள் மேல் விதிப்பதால் வசூலிக்கிறது. இந்த நிதிக்கு தனி நபர்களும் நன்கொடை வழங்கலாம். பின்னர் அதன் ஒரு பகுதியை மாநில பேரிடர் நிதி (State Disaster Response Fund) உருவாக்கத்துக்குக் கொடுத்து விடுகிறது. ஒன்றிய அரசு 75%, மாநில அரசு 25% பங்களித்து மாநில பேரிடர் நிதி உருவாக்கப்படுகிறது.

ஆனால், ஒரு மாநிலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படும் பேரிடரின் கடுமை அதிகமாக இருந்தால் அந்த மாநிலத்தின் பேரிடர் நிதியிலிருந்து மட்டும் அதனால் நிவாரணம் அளிக்க முடியாது. அப்படிப்பட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்படும்போது மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் கூடுதல் ஒதுக்கீட்டை தேசிய பேரிடர் நிதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பதே இந்த நிதியின் நிர்வாக விதி.

பேரிடர் நிதி மேலாண்மைக்காக 2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் விதி 3.1 தெளிவாக இந்த நோக்கத்தைக் கூறுகிறது.

3.1 Natural Calamities of cyclone, drought, earthquake, fire, flood, tsunami, hailstorm, landslide, avalanche, cloud burst and pest attack considered to be of severe nature by Government of India and requiring expenditure by a State Government in excess of the balances available in its own State Disaster Response Fund (SDRF), will qualify for immediate relief assistance from NDRF.

தமிழில்: புயல், பஞ்சம், நிலநடுக்கம், நெருப்பு, வெள்ளம், சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பனிப்பாறைச் சரிவு, மேக உடைப்பு மற்றும் கிருமி தாக்குதல் ஆகிய இயற்கைப் பேரிடர்களின் தன்மையை கடுமையானதாக ஒன்றிய அரசு மதிப்பிடுவதும், மாநில அரசின் வசமுள்ள மாநில பேரிடர் நிதியை விட அதிகமான நிதி நிவாரணத்துக்கு தேவைப்படுவதும், தேசிய பேரிடர் நிதியிலிருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்கான தகுதிகளாகும்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன? இரு விதங்களில் தேசிய பேரிடர் நிதி, மாநில பேரிடர்களைச் சந்திக்க பகிரப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் முன் தீர்மானிக்கப்பட்ட அளவு நிதி மாநில பேரிடர் நிதிக்கு வழமையான பாதிப்புகளைச் சமாளிக்க தரப்படும் (தமிழ்நாட்டுக்கு இவ்வகையில் வழங்கப்படுவது ரூ.900 கோடி).

மேலதிகமாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்போது மாநில அரசுகள் மேலதிக நிதியைக் கோரிப்பெறலாம் (தமிழ்நாடு உடனடி இடைக்கால நிவாரண தொகையாகக் கேட்பது ரூ.2,000 கோடி).

Is the Union government an empire that ignores disaster?

யாரை குழப்புகிறார் நிர்மலா சீதாராமன்?

தமிழ்நாடு மிகக் கடுமையான வெள்ளத்தையும், மழைப்பொழிவையும் சந்தித்துள்ளதால் அதன் நிர்ணயிக்கப்பட்ட மாநில பேரிடர் நிதியான 1,200 கோடி ரூபாய் நிவாரணத்துக்குப் போதாது என்று மதிப்பிட்டு, கிட்டத்தட்ட 12,000 கோடி ரூபாய் நிவாரண உதவிகள் செய்ய தேவைப்படும் என்று கருதுகிறது. அதனால் உடனடி இடைக்கால நிவாரணமாக 2,000 கோடி ரூபாயாவது தேசிய நிதியிலிருந்து விடுவிக்கச் சொல்லி கோருகிறது.

இப்படி தேசிய பேரிடர் நிதியிலிருந்து கூடுதல் பணம் வேண்டுமென்றால் ஒன்றிய அரசு பேரிடரை “கடுமையான பேரிடர்” என்று அங்கீகரிக்க வேண்டுமென்று பார்த்தோம். அதன் பிறகு செலவுகளைச் சமாளிக்க மாநில பேரிடர் நிதி போதாது என்பதையும் ஏற்கும்போதுதான் அது கூடுதல் நிதியைத் தரும்.

இந்த அங்கீகாரத்தைத்தான் “தேசிய பேரிடர்” என்று அறிவிக்க கோருவதாக பொதுவழக்கில் கூறப்படுகிறது. எந்த பேரிடரும் ஒட்டுமொத்த தேசத்தையும் தாக்காது; ஒரு சில மாவட்டங்களைத்தான் பெரிதும் தாக்கும். ஆனால், கூடுதல் நிவாரணத் தொகை தேசிய பேரிடர் நிதியிலிருந்து வருவதால்தான் அதை தேசிய பேரிடர் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த எளிய உண்மையை திரித்துப் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “தேசிய பேரிடர்வு” என்று எதையும் அறிவிப்பதில்லை என்று மீண்டும், மீண்டும் சொன்னார். பேரிடர் என்ற வார்த்தையை தவறாகப் “பேரிடர்வு” என்று கூறினாலும், அதை வாய் தவறி சொல்லாமல் பலமுறை அழுத்தம் திருத்தமாக “பேரிடர்வு” என்றே கூறினார். உச்சகட்ட மமதை அவர் கூற்றில் வெளிப்பட்டது.

சென்னையிலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் வீடு வாசலை விட்டு வெளியேறி அகதிகளாக இருக்கும் மக்களின் நிலையை ஒரு நிமிடமாவது எண்ணிப்பார்த்திருந்தால் அவர் இப்படிப் பேசியிருப்பாரா? அவர் என்ன சொல்லியிருக்க வேண்டும்?

“ஒன்றிய அரசு மாநில பேரிடர் நிதிக்குரிய தொகையை முன் கூட்டியே கொடுத்துவிட்டது. கூடுதல் நிதி கொடுப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கிறோம். மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் கவலையளிக்கின்றன. நிச்சயம் ஆய்வுக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து பார்த்து ஆவன செய்வோம்” என்று கூறியிருந்தால் அது கண்ணியமான சொற்களாக இருந்திருக்கும்.

ஆனால் மாநில பேரிடர் நிதிக்கு வழமையாக வழங்க வேண்டிய நிதியைக் கொடுத்ததே ஏதோ இந்த கடும் பேரிடரை சந்திக்கக் கொடுத்தது போலத் திரித்துப் பேசுவதும், பேரிடரின் கடுமையைக் குறித்த மாநில அரசின் அறிவிப்பினை அவமதித்து ஏளனம் செய்யும் வகையில் பேசுவதும் ஆணவப் போக்கினையே வெளிப்படுத்துகிறது.

Is the Union government an empire that ignores disaster?

யார் வீட்டு சொத்து? Is the Union government an empire that ignores disaster?

தேசியப் பேரிடர் நிதி எங்கிருந்து வருகிறது? ஒன்றிய அரசு நிலவில் பயிர் செய்து கொண்டு வருகிறதா? அது தமிழ் நாட்டு மக்களும் தரும் வரிப்பணம்தானே? இங்கே புகைக்கப்படும் ஒவ்வொரு சிகரெட்டிலிருந்தும் பெறப்படும் செஸ் வரியும்தானே தேசிய பேரிடர் நிதி? அது மாநிலங்கள் தேவைப்பட்டால் கேட்டுப் பெறத்தானே இருக்கிறது?

இதைச் சுட்டிக்காட்டத்தான் அமைச்சர் உதயநிதி உங்கள் “மரியாதைக்குரிய” அப்பாவின் வீட்டு சொத்தா என்று கேட்டார். ஒன்றிய ஆட்சியாளர்கள் தங்கள் பதவிக்குரிய கண்ணியத்துடனும், பொறுப்புடனும், மக்கள் மீதான அக்கறையுடனும் பேசினால் இது போல கேட்க வேண்டிய தேவை எழாது.

உண்மையில் பேரிடர் எவ்வளவு கடுமையானது, அதற்கு நிவாரணம் வழங்க எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதையெல்லாம் கணக்கீடு செய்ய கால அவகாசம் தேவைப்படும். ஆனால் சேதங்களின் பரிமாணம் கண்கூடாக இருக்கும்போது இது “கடுமையான” பேரிடர், ஆங்கிலத்தில் சொன்னால் “Severe” என்பதையும், அதற்கு மாநில நிதியான 1200 கோடி ரூபாய் போதாது என்பதையும் மதிப்பிட அதிக அவகாசம் தேவையில்லை.

எனவே இடைக்கால நிதியாக மாநில அரசு கேட்கும் கூடுதல் 2,000 கோடி ரூபாயை உடனே ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். ஏனெனில் வழிகாட்டு நெறிமுறைகளில் “உடனடி” (Immediate) என்ற வார்த்தையும் இடம் பெற்றிருப்பதை மேலே காட்டிய விதிமுறை 3.1இல் காணலாம். பின்னர் விரிவான கணக்கீட்டிற்குப் பிறகு கூடுதல் தொகையைத் தரலாம்.

பேரரசாக கருதிக்கொள்கிறதா ஒன்றிய அரசு?

தினமலர் நாளேடு கருத்தியல் அளவில் பாரதீய ஜனதா கட்சியை ஆதரிக்கக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள கூட்டாட்சி தத்துவத்தை மதிக்க வேண்டும். ஒன்றிய நிதியமைச்சர் கையில் பணத்தை வைத்து விசிறிக்கொள்வது போலவும், அமைச்சர் உதயநிதி அவரிடம் யாசகம் கேட்பது போலவும் கேலிச்சித்திரம் வரைவது அரசியலமைப்பு சட்டத்தை கேவலப்படுத்துவதாகும்.

மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசுகள் அல்ல. ஒன்றிய அரசு அவற்றை அடக்கி ஆளும் பேரரசும் அல்ல. இறையாண்மை, இறையாண்மை என்று மூச்சுக்கு முந்நூறு முறை புலம்பும் பாஜக கட்சியினர் இறையாண்மை அரசிடம் இல்லை, அது மக்களிடம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இது மக்களாட்சி.

அனைத்து மாநில மக்களின் உழைப்பில்தான், உற்பத்தியில்தான், வரிப்பணத்தில்தான் தேசம் என்பது சாத்தியமாகிறது. அதிகாரம் என்பது அவர்கள் கையில்தான் உள்ளது. ஆட்சியாளர்கள் மக்களுக்கு சேவை செய்யவே அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ஒன்றிய அரசாங்கத்தை வாக்களித்து உருவாக்கிய மக்கள்தான், மாநில அரசையும் வாக்களித்து உருவாக்கியுள்ளார்கள்.

மாநில மக்களுக்கு ஒரு பேரிடர் பாதிப்பு என்றால் அவர்கள் ஏன் யாசகம் கேட்க வேண்டும்? யாரிடம் கேட்க வேண்டும்? அவர்கள் உரிமையைத்தான் கேட்கிறார்கள். மாநில அரசாங்கம் அதனால் ஆன அனைத்தையும் செய்து வருகிறது. மேலும் மேம்பட்ட நிவாரணம் வழங்க அதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. அதைக் கேட்டால் அதன் பெயர் யாசகமா? அமைச்சர் உதயநிதியின் சுயமரியாதை மிக்க உரிமைக்குரலைக் கேட்டு மிரண்டுதானே தினமலர்  கேலிச்சித்திரம் வரைகிறது?

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை மக்களை தேர்தல் களத்தில் சந்தித்ததில்லை. வாக்கு கேட்டதில்லை. கட்சியால் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகி விடுகிறார். அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதிர்வரும் 2024 தேர்தலிலாவது மக்களவை தொகுதி ஒன்றில் களம் காண வேண்டும். அப்போதுதான் இது மக்களாட்சி என்று அவருக்குப் புரியும்.

தினமலர் நாளேடு மக்கள் வாங்குவதால்தான் நிலைத்திருக்கிறது. மக்கள் உணர்வுகள் புரியாமல் அது கேலிச்சித்திரம் வரைந்தால் அதையும் ஒரு நாள் மக்கள் புறக்கணிக்கக் கற்பார்கள். மக்களாட்சியில் மக்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டிய ஊடகங்களே ஆட்சியாளர்களின் ஆணவத்துக்கு வெண்சாமரம் வீசக்கூடாது.

கட்டுரையாளர் குறிப்பு:

Is the Union government an empire that ignores disaster? by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 லட்சம் குளோரின் மாத்திரைகள்!

பியூட்டி டிப்ஸ்: முகத்தில் சருமத் துவாரங்கள்… நீக்குவது எப்படி?

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் ஸ்பிரிங் ரோல்!

Is the Union government an empire that ignores disaster?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *