நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் 1500 கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு தினமும் சுமார் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள், தமிழகம், கேரளா மற்றும் வடமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழக அரசு, சத்துணவு திட்டத்துக்கு வாரம் 3 கோடி முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
நாமக்கல் கோழிப்பண்ணைகளில் உற்பத்தியாகும் 52 கிராம் எடை கொண்ட பெரிய முட்டைகளுக்கு என்இசிசி (தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு) தினசரி பண்ணையளாளர்கள், வியாபாரிகளின் கருத்துகளை கேட்டு விலை நிர்ணயம் செய்து வருகிறது.
கடந்த மாதம் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 550 காசாக இருந்தது. இந்த விலை படிப்படியாக சரிந்து 475 ஆக குறைந்தது.
கடந்த 4-ம் தேதி முதல் படிப்படியாக முட்டை விலை உயர்த்தப்பட்டது. கடந்த 20-ம் தேதி ஒரு முட்டை விலை 555 காசாக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக முட்டை விலை தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 5 காசுகள் முட்டை விலையில் என்இசிசி உயர்த்தியது.
இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 570 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே முட்டையின் அதிகபட்ச விலையாகும். இதற்கு முன், கடந்த ஜனவரி மாதம் ஒரு முட்டையின் விலை 565 காசாக இருந்தது.
இதனால் சில்லறை விற்பனை கடைகளில் 1 முட்டை 7 ரூபாய்க்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதும் இந்த நிலை ஏற்படும்.
முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ்,
“வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு முட்டை தேவை அதிகரித்துள்ளது.
தமிழகம், கேரளாவில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் அனைத்து மண்டலங்களிலும் முட்டையின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. தற்போது ஒரு முட்டையின் விலை 570 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: முகத்தில் சருமத் துவாரங்கள்… நீக்குவது எப்படி?
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
Why Egg prices have gone up sharply