எல்ஐசி தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் – பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தீ விபத்து என நாடகம்

Published On:

| By Pandeeswari Gurusamy

மதுரை எல்ஐசி கிளை அலுவலகத்தில் ஆவண முறைகேடு தொடர்பான விசாரணை நடத்திய நிலையில் தீ விபத்து போல் நாடகமாடி பெண் அதிகாரியை எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உதவி நிர்வாக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தின் 2ஆவது தளத்தில் கடந்த டிசம்பர் 17, 2025 அன்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி (55) தீயில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், உதவி நிர்வாக அதிகாரி ராம் என்பவருக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கல்யாணி நம்பியின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

தீ விபத்து ஏற்பட்டபோது கல்யாணி நம்பி தனது மகனுக்கு செல்போனில் பேசியபோது பதற்றத்துடன் “போலீசுக்கு போன் செய்” எனக் கூறிய நிலையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், கல்யாணி நம்பியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது மகன் லட்சுமி நாராயணன் (25) திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.புகாரின் பேரில் திலகர்திடல் காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, தீ விபத்தில் காயமடைந்த ராம் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. ராம் தனியார் மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் அவரிடம் விசாரணை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் காவல்துறையினர் ராமிடம் விசாரணை நடத்தினர்.

ADVERTISEMENT

விசாரணையில்,”தீ விபத்தில் உயிரிழந்த பெண் முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி கடந்த மே மாதம் திருநெல்வேலியிலிருந்து பணி உயர்வு பெற்று மதுரை எல்ஐசி கிளை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதே அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக ராம் (45) பணிபுரிந்து வந்த நிலையில், அவரது சில ஆவணங்களில் குளறுபடி மற்றும் முறைகேடு இருப்பதாகத் தெரியவந்தது. இது குறித்து கல்யாணி நம்பி ராமிடம் சில மாதங்களாகத் தொடர்ந்து விசாரித்து வந்துள்ளார். சம்பவ நாளன்று ராம் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி அதனைக் கண்டு தனது மகனுக்கு செல்போன் மூலம் பேசி, காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த ராம் உடனடியாக பெட்ரோலை கல்யாணி நம்பியின் மீது ஊற்றிவிட்டு கதவைப் பூட்டிவிட்டு வெளியேறினார். அப்போது அருகில் இருந்த தீ கல்யாணி நம்பியின் மீது பற்றி எரிந்தது. கல்யாணி நம்பியின் உடலில் பெட்ரோலை ஊற்றிய போது ராமின் காலிலும் பெட்ரோல் பட்டது. இதனால் அவர் அங்கிருந்து ஓடிவந்தார். தீ இரண்டாவது தளத்தில் பரவத் தொடங்கியதால், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இரண்டாவது தளத்தில் காயம்பட்டுக் கிடந்த ராமை மட்டும் கண்டு, அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்” என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் உதவி நிர்வாக அதிகாரி ராமை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் எல்ஐசி அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலை சம்பவம் நடந்த எல்ஐசி கிளை அலுவலகத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ராம் காயம்பட்டு கிடந்த நிலையிலும் கூட, மேலே கல்யாணி நம்பி இருப்பது குறித்து மீட்புப் பணியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தகவல் அளிக்கவில்லை என, தீ விபத்து நடைபெற்றபோது மீட்புப் பணியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share