செஸ் ஒலிம்பியாட்டில் முத்திரை பதித்த 8 வயது சிறுமி: யார் இவர்?

விளையாட்டு

சென்னை மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றுள்ள மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் 8 வயது சிறுமியான ராண்டா செடர். இவர் தினமும் போர் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்.

39 நகர்வுகளில் முடிந்த ஆட்டம்!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் நேற்று (ஜூலை 30) நடந்த முதல் போட்டியில் பங்கேற்ற ராண்டா செடர், கொமொரோசு நாட்டின் ஃபஹிமா அலி முகமதுவுக்கு எதிராக 39 நகர்வுகளில் ஆட்டத்தை தன்வசப்படுத்தி வெற்றி பெற்றார். இவருடன் சென்னை வந்துள்ள பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் இது முதல் செஸ் ஒலிம்பியாட் தொடர். நேற்று நடைபெற்ற போட்டியின் முடிவில் பாலஸ்தீன அணியினர் கொமொரோஸை 4-0 என்ற கணக்கில் வென்றனர்.

5 வயது முதல் செஸ் ஆர்வம்!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மிகவும் வயது குறைந்த போட்டியாளராக கருதப்படும் ராண்டா செடருக்கு, 5 வயதில் செஸ் விளையாட்டை அவரது தந்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இவர் வயதை ஒத்த சிறுமிகள் எல்லாம் கார்ட்டூன்கள் பார்க்கும் போது, இவர் செஸ் போர்டில் காய்களை நகர்த்தி விளையாடி வருகிறார். பாலஸ்தீன நாட்டில் நடைபெற்ற மகளிர்க்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றதை தொடர்ந்து, சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் . ராண்டா போதுமான உயரம் இல்லாததால், விளையாட்டின் போது முழங்காலில் நின்றபடியே மேஜையில் காய்களை நகர்த்தினார்.

ராண்டாவை சந்திக்க விரும்பும் கிராண்ட் மாஸ்டர்!

போட்டியினைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், படிப்பு மற்றும் செஸ் இரண்டையும் விரும்புகிறேன். செஸ் ஒலிம்பியாட் தொடரில் மிக இளம்வயது சிறுமியாக பங்கேற்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே என்னை அனைவரும் நன்றாக கவனித்து கொள்கின்றனர் என்று கூறினார். மேலும் தனது ரோல் மாடலான ஹங்கேரியன் நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஜூடித் போல்கரை சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ராண்டா செடர் குறித்து 2 நாட்களுக்கு முன்னர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள ஹங்கேரிய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஜூடித் போல்கர், நான் ராண்டாவை செஸ் ஒலிம்பியாட்டில் தொடர்ந்து கவனிப்பேன். அவரது வெற்றியைத் தொடர்ந்து அவரை ஸ்டூடியோவில் சந்திக்க விரும்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

ராண்டாவின் வெற்றியை உற்றுநோக்கும் கண்கள்!

பாலஸ்தீன அணியில் ராண்டாவை விட அனைவரும் வயதில் மூத்தவர் என்பதால், அவரை மிக பொறுப்பாக கவனித்து, அவருடன் தங்களது ஆலோசனைகளை பகிர்ந்து ஊக்குவித்து வருகின்றனர். இதுகுறித்து சக நாட்டு வீராங்கனையான 15 வயதான இமான் சவான் கூறுகையில், “பாலஸ்தீன பெண்கள் அணி செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பது இதுவே முதல்முறை. நாங்கள் சிறப்பாக விளையாடினால், பாலஸ்தீனத்தில் செஸ் விளையாட்டு பிரபலமாகி விடும். இங்கு ராண்டா செடரின் வெற்றியை பலரும் கவனித்து கொண்டிருக்கின்றனர். அவர் மீது அனைவரும் அன்பு காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

ராண்டா செடர் மட்டுமின்றி, போட்டியில் பங்கேற்றுள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த நால்வருக்கும் இது முதல் போட்டி என்பதால் கூடுதல் கவனமுடன் விளையாடி வருகின்றனர். வரும் நாட்களில் அவர்களது போட்டி கடுமையாக இருக்கும் சூழலில் முழு கவனத்தையும் செஸ்ஸில் செலுத்தி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
2
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

1 thought on “செஸ் ஒலிம்பியாட்டில் முத்திரை பதித்த 8 வயது சிறுமி: யார் இவர்?

Leave a Reply

Your email address will not be published.