பெருங்குடல் புற்றுநோயின் (Colon Cancer) தவிர்க்க முடியாது 5 ஆரம்ப கட்ட அறிகுறிகளை விரிவாக காணலாம்.
பெருங்குடல் புற்றுநோய் குறித்து நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். பெருங்குடல் அல்லது மலக்குடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளரும் நிலைதான் பெருங்குடல் புற்றுநோய். இது இந்தியாவில் காணப்படும் நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோயாக உள்ளது. ஆனாலும் பெருங்குடல் புற்றுநோய் (colorectal cancer) தொடர்பான விழிப்புணர்வு என்பது குறைவாகவே உள்ளது.
வழக்கமாக பெருங்குடல் புற்றுநோய் என்பது மற்ற புற்றுநோய்களைப் போல பெரிய அபாய அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்துவதில்லை. பல நேரங்களில் அறிகுறிகள் மிகவும் சிறிதாகவே இருப்பதால் அவற்றை மக்கள் புறக்கணித்துவிடுகிறார்கள். பெருங்குடல் புற்றுநோயின் புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகளை (Colorectal cancer symptoms) விரிவாக பார்க்கலாம்.
குடல் இயக்கத்தில் மாற்றம்
குடல் இயக்கத்தில் ஏற்படும் தொடர் மாற்றங்கள் ஒரு அறிகுறியாக இருக்கலாம். வழக்கமாக சீரான குடல் இயக்கம் கொண்ட ஒருவர் அடிக்கடி மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு அல்லது இரண்டையும் (changes bowel habits) உணரலாம். தொடக்கத்தில் இது சாதாரண பிரச்சனை என்பது போலதான் தோன்றும். உணவு, மன அழுத்தம், டிராவல், வானிலை மாற்றம் கூட அதற்கு காரணம் என்று நினைத்துவிடுவோம். ஆனால், சில வாரங்கள், சில மாதங்கள் இதே நிலை தொடர்ந்தால் அதற்கு கவனம் கொடுக்க வேண்டும்.
மலத்தில் ரத்தம் வெளியேறுதல்
மலத்தில் ரத்தம் வெளியேறுவது பெருங்குடல் புற்றுநோயின் மற்றொரு அறிகுறியாக இருக்கலாம். மலத்தில் இருந்து லேசாக சிறிய சிவப்பு கீற்று போல அது கண்ணுக்குத் தெரியும். மற்ற நேரங்களில் ரத்தம் (blood in the stool) அடர் நிறமாக இருப்பதால் அதனை கவனிக்கத் தவறிவிடுகிறோம். மேலும் மலத்தில் ரத்தம் வருவது மூல நோய் பிரச்சனைதான் என கருதிவிடுகிறார்கள். ஆனால், பரிசோதனை செய்யாமல் மூலப் பிரச்சனை என்ற முடிவுக்கு வருவது தவறானது. வரக்கூடாத இடத்தில் ரத்தம் வந்தால் அதற்கு கவனம் கொடுக்க வேண்டும்.
காரணமின்றி அடிக்கடி சோர்வு
காரணமின்றி சோர்வு ஏற்படுவது ஒரு அறிகுறியாக இருக்கலாம். அலுவலகப் பணி, வீட்டு வேலைகள், செல்போன் பயன்பாடு காரணமாக நாள் முழுவதும் சோர்வாக (unexplained fatigue) இருப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. ஆனால், சோர்வு மற்றும் பலவீனம் வாரக்கணக்கில் இருந்தால் அது முக்கியமானது. ரத்த சோகையும் அதனுடன் சேரும்போது சோர்வு என்பது இன்னும் தீவிரமடைகிறது. பெருங்குடலுக்குள் ஏற்படும் மெதுவான ரத்தப்போக்கு காரணமாக அது இருக்கலாம்.
வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள்
சில நேரங்களில் வயிற்றில் லேசான வலி, வாயுத் தொல்லை அல்லது கனமான உணர்வு போன்றவை அடிக்கடி ஏற்படும். இது சாதாரண வயிற்றுப் பிரச்சனை (Stomach problems) என மக்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுவார்கள். சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்வார்கள். சில நேரங்களில் வலி நின்றுவிடும். ஆனால் பல நேரங்களில் அது லேசான எரிச்சலாகவே நீடிக்கும். அது பெரிய ஆபத்து இல்லை என்று நினைப்பதால் அதனை எளிதில் புறக்கணித்துவிடுகிறார்கள்.
முயற்சி செய்யாமலேயே உடல் எடை குறைவு
முயற்சி செய்யாமலேயே உடல் எடை குறைவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எடை குறைகிறதே என்று தொடக்கத்தில் சிலர் இதனை நல்லது என எடுத்துக்கொள்வார்கள். உடைகளும் தளர்வாக மாறுகின்றன. பசியிலும் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால், எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை (Weight loss without try) சீராக குறையும்போது அதனை கூர்ந்து கவனிக்க வேண்டும். அரிதினும் அரிதாகவே உடல் எடை காரணமின்றி குறைகிறது.
தொடக்கத்தில் கண்டுபிடித்தால் குணப்படுத்துவது எளிது
ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை செய்து பெருங்குடல் புற்றுநோயை கண்டுபிடித்தால் சிகிச்சை அளிப்பது மிகவும் எளிதாக இருக்கும். கடுமையான வயிற்று வலி மட்டுமே ஒரே அறிகுறி அல்ல. மலப் பரிசோதனை அல்லது கோலோனோஸ்கோப்பி பரிசோதனை மூலம் பிரச்சனை என்ன என்பதை எளிதில் கண்டறியலாம். மோசமான அறிகுறிகள் தாக்குவதற்கு முன்பே இந்த பரிசோதனைகள் (colon cancer treatment) மூலம் பெருங்குடல் புற்றுநோயை கண்டறிந்துவிடலாம். முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டோருக்குதான் பெருங்குடல் புற்றுநோய் வரும். இப்போது இளம் வயதினருக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே, பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுடன் இருங்கள், நல்வாழ்க்கை வாழுங்கள்.
