தமிழகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி, அவர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு (இலவச உணவு) வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணைப்படி, ”தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 14.08.2025 அன்று நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு நிதித்துறை அமைச்சர் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுவது முக்கிய இடம்பெற்றது.

அப்போது அவர், “தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்றார்.

மேற்காணும் இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான செயற்குறிப்பினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அரசிற்கு அனுப்பியுள்ளார். இச்செயற்குறிப்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தினை செயல்படுத்திட உணவளிப்பு நிறுவனத்தை (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கு ஒப்பந்தம் கோருவதற்கு முன்மொழிவதாகவும், அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, மத்திய மற்றும் தெற்கு வட்டார பகுதிகளில் பணிபுரியும் மொத்தம் 29,455 பணியாளர்களுக்கு நியமிக்கப்பட்ட இடங்களில் உணவு வழங்குவதற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவின் தேவைகள் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் வெளிசந்தையில் முன்னணி உணவளிப்பு நிறுவனத்திடமிருந்து (Catering Agency) பெறப்பட்டபடி, குறிப்பிட்ட விநியோக புள்ளிகளில் போக்குவரத்து மற்றும் சிற்றுண்டி தாங்கிப்பட்டியில் (Tiffin Carrier) உணவு விநியோகம் உட்பட உணவுக்கான செலவின விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சியின் 29,455 எண்ணிக்கையிலான தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கு சிற்றுண்டி தாங்கிப்பட்டி (Tiffin Carrier) கொள்முதல் செய்வதற்கும், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பணிகளை கண்காணிக்க ஒரு திட்ட மேலாண்மை ஆலோசகர் பெருநகர சென்னை மாநகராட்சியால் நியமனம் செய்வதற்கும் ஆகும் செலவினம் பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மன்றத்தின் பின்னேற்பு அனுமதி எதிர்நோக்கி பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான உணவளிப்பு நிறுவனத்தைத் (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கான செலவினத் தொகை ரூ.186,94,22,969/-க்கு அரசின் நிர்வாக அனுமதியினை கோரியுள்ளார். மேலும், இப்பணிக்கான செலவினத் தொகையினை அரசு, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு அளிக்கும் ஆறாவது மாநில நிதி ஆணைய மானிய நிதியிலிருந்து பெறுவதற்கான அனுமதியையும் கோரியுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரின் செயற்குறிப்பினை கவனமான பரிசீலனைக்குப் பின்னர் ஏற்று, பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான உணவளிப்பு நிறுவனத்தை (Catering Agency) தேர்ந்தெடுக்கும் பணிக்கு ரூ.186,94,22,969/- (ரூபாய் நூற்று எண்பத்து ஆறு கோடி தொண்ணூற்று நான்கு இலட்சத்து இருபத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பது மட்டும்) மதிப்பீட்டில் ஆறாவது மாநில நிதி ஆணைய மானிய நிதியிலிருந்து மேற்கொள்ள மன்றத்தின் பின்னேற்பு அனுமதி எதிர்நோக்கி அரசின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடுகிறது.
மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு இவ்வாணையின் இணைப்பில் உள்ள பொதுவான வழிகாட்டுதல்களை நிர்ணயம் செய்தும் அவற்றைத் தவறாமல் பின்பற்றுவதை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உறுதி செய்யுமாறும் அரசு ஆணையிடுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
