அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

Published On:

| By Kavi

முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் உரிய அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூலித்ததாகப் புகார் எழுந்தது.

ADVERTISEMENT

இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சுமார் ரூ.400 கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு நவம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். 

ADVERTISEMENT

இந்த மனு மீதான விசாரணை இன்று (அக்டோபர் 30) நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில், ‘சிறையில் சரியான உணவு வழங்காததால்  2-4 கிலோ வரை அன்பில் மகேஷின் உடல் எடை குறைந்துள்ளது. அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து நவம்பர் 2ஆம்ம் தேதி வரை போலீஸ் காவல் கேட்டுள்ளனர். 

ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே அவரிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது”  என்று வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதனிடையே, வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த அன்பில் மகேஷை 5 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

போலீசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, அன்பில் மகேஷை நாளை முதல் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 

விசாரணை சமயத்தில் அன்பில் மகேஷை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது.  உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

காவலில் உள்ள காலத்தில் நாள்தோறும் அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share