சென்னையில் 102.2° பாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக இருந்து வருகிறது. நேற்று 15 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது.
இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வேலூரியில், 41.5° செல்சியஸ் அதாவது 106.7 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்துள்ளது.
சென்னை, மதுரை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இன்றும் நாளையும் சென்னையில் 38-39° செல்சியஸ் அதாவது 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இன்று (ஏப்ரல் 28) வெளியிட்ட அறிவிப்பில், “
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்
28-04-2026 முதல் 02-05-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
28-04-2026 முதல் 02-05-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்
அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
28-04-2026 முதல் 02-05-2026 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று (28-04-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்.
நாளை (29-04-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப பாதிப்பை தவிர்க்க என்ன செய்யலாம்?
“தாகம் எடுக்காவிட்டாலும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உச்ச நேரங்களில் (மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை) வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
மெல்லிய, தளர்வான மற்றும் காற்றோட்டமான ஆடைகளை அணியலாம்.
முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே அல்லது நிழலான/குளிர்ச்சியான இடங்களில் இருக்கவும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
மதுபானம், காஃபின் மற்றும் கனமான உணவுகளைத் தவிர்க்கவும்.
குழந்தைகள், முதியவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
தலைசுற்றல், தலைவலி, குமட்டல், அதிகப்படியான வியர்வை போன்ற அறிகுறிகளைக் கவனியுங்கள் – தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடுங்கள்” என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
