100 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு : அன்புமணி ராமதாஸ்

Published On:

| By Balaji

கொள்ளளவு 30 சதவிகித அளவுக்கு குறைந்திருப்பதால், அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரும் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று, டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அனைத்து ஏரிகளும், குளங்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது ஆகியிருக்கும். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்படாததாலும், அவற்றில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும் நீர்நிலைகளின் கொள்ளளவு 20 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இதனால் இரு வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலாவதாக, ஒரு டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கவேண்டிய ஏரியில் 0.70 டி.எம்.சி. முதல் 0.80 டி.எம்.சி. வரையிலான தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். பாசனத்துக்காக இந்த நீர்நிலைகளை நம்பியிருக்கும்போது, தண்ணீர் குறைவாக இருக்கும் என்பதால் கடைசி நேரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும்.

ADVERTISEMENT

இரண்டாவதாக, அதிக மழை பெய்யும் காலங்களில் நீர்நிலைகள் வெகு விரைவாக நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்து பெரியளவிலான இழப்புகளை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. இவற்றைத் தடுக்க வேண்டுமானால் நீர்நிலைகள் சரியான இடைவெளியில் தூர்வாரப்படுவது அவசியமாகும். நீர்நிலைகளை முறையாக தூர்வாருவதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு 100 டி.எம்.சி. நீரை சேமிக்க முடியும். தமிழகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சகம்தான் இப்பணிகளை கவனிக்க வேண்டும். ஆனால் பொதுப்பணித்துறை என்பது வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி கோடிகளை குவிக்கும் அமைச்சகமாக மட்டும்தான் பார்க்கப்படுகிறதே தவிர, பாசன ஆதாரங்களை மேம்படுத்தும் பொறுப்பும் அதற்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாசனதாரர்களுடன் இணைந்து தூர்வாரும் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். மேலும் பாசனம் சார்ந்த பணிகளை கவனிக்கவும், நீர் மேலாண்மையை மேற்கொள்ளவும் பொதுப்பணித் துறையை பிரித்து நீர்வள மேலாண்மை என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share