உடுமலையில் நடந்தேறியிருக்கிறது அந்தப் பயங்கரம். இதுவரை வீட்டுக்குள் நடந்துவந்த சாதி ஆணவக் கொலைகள் இப்போது, நடுத்தெருவில் பலர் பார்க்க நடக்கத் தொடங்கிவிட்டது தமிழகத்தில். காதல் கலப்பு மணத் தம்பதிகள் கவுசல்யா, சங்கர் மீது நடத்தப்பட்டிருக்கும் இந்தக் கொலைவெறித் தாக்குதல், தமிழகத்தை அதிர்ச்சியில் உறையச் செய்திருக்கும்நிலையில் மக்கள் நலக் கூட்டணி அமைப்பாளர்களுள் ஒருவரான விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவனிடம் பேசினோம்.
உடுமலையில் நடந்திருக்கும் சாதியப் படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழகத்தில், தென் மாவட்டங்களில் மட்டும் 600க்கும் மேற்பட்ட சாதியப் படுகொலைகள், ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன. இதில், இறந்தவர்களில் 70% தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள். அரசியல் கட்சிகள் பொதுமேடைகளில் சாதிவெறியைத் தூண்டும்வகையில் பேசுவது, இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கும்வகையில் அமைகிறது. சங்கர்-கவுசல்யா இருவரும் 6 மாதத்துக்குமுன்பே திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். அவர்களுக்கு ஆபத்து இருக்கிறது என்று காவல்துறைக்கும் தெரியும். இருந்தும், உரிய பாதுகாப்பு வழங்காமல் இருந்திருக்கிறார்கள். கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு அரசியல் ஆதாயத்துக்காக அரசு சில சலுகைகளை வழங்குகிறது. ஆனால் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கும் இந்தப் படுகொலைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. எனவேதான், மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும்வண்ணம் சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவித்திருக்கிறோம். அதை, தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் யாரும் இதைப்பற்றி கவலைப்படுவதில்லை.
மக்கள் நலக் கூட்டணி உடைந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறதே?
அந்தச் செய்திகள் முற்றிலும் வதந்தி. அதில் உண்மை இல்லை.
தொடர்ச்சியாக கூட்டணி உடைந்துவிடும் என்று கருத்து முன்வைக்கப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மக்கள் நலக் கூட்டணியால் இன்று அதிமுக-வுக்கும், திமுக-வுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேற்று அதிமுக கூட்டணியில் சில கட்சிகள், தொகுதிகள் தராவிட்டாலும் அதிமுக-வை ஆதரிக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். அதிமுக-வுடன் இன்று, மக்கள் செல்வாக்கு உள்ள எந்தக் கட்சிகளும் இணையத் தயாராக இல்லை. அதேபோல், திமுக-வோடு காங்கிரஸ் மட்டும்தான் இணைந்துள்ளது. பாமக தனியாகப் போய்விட்டது. எதிர்பார்த்த தேமுதிக-வும் கூட்டணிக்குள் வரவில்லை. இது, மக்கள் நலக் கூட்டணியால் ஏற்பட்ட நெருக்கடி. இதனால் விரக்தி அடைந்தவர்கள்தான் இப்படி செய்திகளைப் பரப்புகிறார்கள்.
தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி இணையுமா? அல்லது உங்களை விஜயகாந்த் ஏற்றுக் கொள்வாரா?
மீண்டும் ஒரு அழைப்பை விஜயகாந்துக்கு விடுத்திருக்கிறோம். முடிவு செய்யவேண்டியது அவர்களின் கையில் இருக்கிறது.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் அப்படித்தானே?
ஆமாம்
பாஜக-வும் தேமுதிக-வுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறது. ஒருவேளை, பாஜக-வையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விஜயகாந்த் நிர்ப்பந்தித்தால் அதை ஏற்பீர்களா?
அதற்கு வாய்ப்பேயில்லை. நாங்கள் ஏற்கனவே திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக-வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறோம். இதில் பாஜக தவிர, மற்ற கட்சிகளுடன் கூட்டணி இல்லை என தேமுதிக அறிவித்துவிட்டது. ஒருவேளை, தேமுதிக-வும் பாஜக-வும் ஒரு கூட்டணியில் இருக்குமானால் அந்தக் கூட்டணியில் மக்கள் நலக் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை. பாஜக-வுடன் கூட்டணி அமைக்காவிட்டால், தனி அணி அமைக்கும் முயற்சி வேண்டாம். ஏற்கனவே, நாங்கள் கட்டமைத்துள்ள கூட்டணியில் அவர் வந்து இணைய வேண்டும். அப்படி வரும்பட்சத்தில் அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
அப்படி விஜயகாந்த் வந்தால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பீர்களா?
முதலில் அவர்கள் கூட்டணிக்கு வரவேண்டும். அதன்பிறகு, அவர்கள் வைக்கிற கோரிக்கைகளைக் குறித்து முடிவெடுக்கப்படும்.
இரு தினங்களுக்கு முன்பாக ஒரு பேட்டியில், ‘திருமாவளவன் நல்ல நண்பர். சிறந்த பேச்சாளர்’ என்று கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார். கருணாநிதியைப் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?
கலைஞர் அவர்கள்மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு குறிப்பாக எனக்கு, மிகுந்த மரியாதை உள்ளது. எந்தக் கசப்பும் இல்லாமல்தான் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம். மற்றபடி, திமுக-வுக்கு எது சரி என்றுபடுகிறதோ அதை அவர்கள் செய்கிறார்கள். எங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை நாங்கள் செய்கிறோம்.
விஜயகாந்த் கொள்கையற்ற அரசியல்வாதி என்ற விமர்சனம் பொதுத்தளத்தில் வைக்கப்படுகிறது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஊழலை ஒழிப்போம், மதுவை ஒழிப்போம் என்பதும் திமுக, அதிமுக-வின் எதேச்சதிகாரப் போக்கை ஒழிப்போம் என்பதும் ஒரு கொள்கைதானே. இவற்றின் அடிப்படையில்தான் மக்கள் நலக் கூட்டணி அவரோடு அரசியல் உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறது. விஜயகாந்தை ஒரு கொள்கை நிலைப்பாடு உள்ள, கொள்கை அடிப்படையில் முடிவுகளை எடுக்கிற தலைவராகத்தான் மக்கள் நலக் கூட்டணி கருதுகிறது.
சமூக நீதி, இடஒதுக்கீடு போன்ற அனைத்திலும் திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறீர்களா?
பொதுவாக, மக்கள் மனதில் இன்று ஒரு வெறுப்பு உருவாகியிருக்கிறது. ஊழல், மதுக்கடைகளைத் திறந்துவைத்தது, கல்வி நிறுவனங்களை வணிகக் கொள்ளையாக மாற்றியது, ஆற்று மணல், தாது மணல், கிரானைட் போன்றவற்றில் சுரண்டல் போன்றவை மக்கள் மனதில் பதிந்திருக்கின்றன. சில நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும்கூட சட்டம் ஒழுங்கைத் தவறவிட்டது. ஆணவக் கொலைகள், சாதிக் கொலைகள் அதிகரித்திருக்கின்றன. தர்மபுரியில் 3 ஊர்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது திமுக, அதிமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன என்பதுதான் எங்களது பார்வை.
ஒவ்வொரு தொகுதியிலும் எந்தச் சாதிக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ, அந்த சாதியைச் சேர்ந்தவர்தான் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். மாற்று அரசியலை முன்னிறுத்துவதாகக் கூறும் நீங்கள் இந்தப்போக்கை மாற்றுவீர்களா?
சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது என்பது சரிதான். ஆனால், மக்கள் சாதியைப் பார்த்துதான் வாக்களிக்கிறார்கள். அதனால், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகவைத்துச் செயல்படும்போது அதைத் தவிர்க்க முடியவில்லை. மக்கள் நல்லவர்களைப் பார்த்து, எந்த நேரத்திலும் எளிமையாக அணுகக் கூடியவர்களைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். அது இல்லாததால், அரசியல் தலைவர்களுக்கு சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
எல்லோருக்கும் சமமான தொகுதிகள் என்பதுதானே மாற்று அரசியல்?
இப்போது நான்கு கட்சித் தலைவர்களும் கூடி, தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிவருகிறோம். யாருக்கு எந்தத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ, எவ்வளவு தொகுதியில் நிற்க யாருக்கு எவ்வளவு பொருளாதாரம் இருக்கிறதோ, அதைவைத்து தொகுதிகளைப் பங்கிட்டு நாங்கள் போட்டியிடுவோம்.
மக்கள் நலக் கூட்டணி 4 பேரும் ஒன்றாகவே இருக்கிறீர்கள். ஆனால் தேமுதிக-வும், விஜயகாந்தும்தான் உங்களிடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகாமல் இருக்கக் காரணமா?
நாங்கள் எந்த இடத்திலும் எங்கள் பணியை நிறுத்தவில்லை. மாநாடு போட்டோம், தொடர்ச்சியாக நான்கு கட்டப் பிரச்சாரத்தை முடித்திருக்கிறோம். எந்தக் கட்சி எந்தெந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம் என, தனித்தனியாக பட்டியல் தயாரித்து மேசையில் வைத்து விவாதித்தோம். இன்னும் சில கட்சிகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் வந்தால், தொகுதிப் பங்கீட்டில் அதற்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்வோம்.
விவேக்,”
