தமிழ் சிறுகதைகளுக்கு இது நூறாவது ஆண்டு. நவீன இலக்கியத்தின் புதிய வடிவமாக வந்த சிறுகதைகள் ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒவ்வொரு போக்குடனும் குறிப்பிட்ட திசையில் எழுச்சிபெற்று வருகின்றன. தொடர்ச்சியான பரிசோதனை முயற்சிகளும் இருந்து வருகின்றன, அவ்வாறு 2000க்குப் பிறகான பத்தாண்டுகளின் இறுதியில் எழுதவும், தீவிரமாக வாசிக்கவும் ஆரம்பித்தவர்களில் சிலர் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களாக மாறியுள்ளனர். அப்படி ஒரு இளம் தலைமுறையினரின் சிறுகதைத் தொகுப்புகளை மட்டும் தொகுத்து பத்து நூல்கள் வரைக் கொண்டு வந்திருக்கிறது யாவரும் பதிப்பகம் . இந்த சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்துள்ள முக்கிய தொகுப்புகளாக இவைகளை சொல்லலாம்.
அந்த பத்து புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களை பார்க்கலாம்.
லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்: – வா.மணிகண்டன்
2014ல் வெளிவந்த சிறுகதைத்தொகுப்பு, இதுவரை மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. துள்ளலும் எள்ளலுமான அட்டகாசமான மொழிநடை வா.மணிகண்டனுடையது. நகர் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டங்கள், அதன் சிக்கல்கள், தினசரி எதிர்கொள்ளும் சாமானிய மனிதர்களின் கதாபாத்திரங்கள், கிராம வாழ்வின் நினைவுகள் என கலந்து கட்டி COMMON MAN-ன் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதைகள் வாசித்து முடித்தவுடன் மனதுக்குள் மழை பெய்யச்செய்கின்றன – இடியும், மின்னலும் சேர்ந்த கொண்டாட்டமன மழை இது.
16 – ரமேஷ் ரக்சன்
பதினாறு என்பது பதின் பருவத்தின் ஒரு முக்கியமான புள்ளி. பதினாறு கதைகளுமே பதின் பருவத்தில் நிகழக்கூடிய விபரீதங்கள், அதிர்ச்சிகள், பாலியல் பிரச்சனைகள், வறுமை, அத்துமீறல்கள், விளையாட்டுத்தனங்கள் என எல்லாவகையான கோணத்திலிருந்தும் சிக்கல்களைப் பதிகின்றன. திருநெல்வேலிக்கு அருகேயுள்ளே கிராமத்தில் வாழும் பதின் பருவத்து ஆட்களும், மாநகரத்தில் பிழைப்புத் தேடி பதின்பருவத்திலேயே வேலை செய்பவர்களையும் என இருவேறு நிலக்காட்சிகளில் பேசுகின்றன. அத்தனையும் வீரியமான குறுங்கதைகள்.
ரகசியம் இருப்பதாய் – ரமேஷ் ரக்சன்
சமகாலத்தின் அபத்தமான கற்பிதமான “ரகசியம்” என்ற ஒன்று இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பவர்களைப் பற்றி பேசும் கதைகளை கொண்டிருக்கும் தொகுப்பு. வாழ்வின் மிக நுணுக்கமான விஷயங்களை மிக நவீனமான நடையில் சொல்லி, மும்பை நகரத்தின் தமிழர்கள் வாழும் பகுதியைப் பற்றிய அவரது கதைகள் சமகால முக்கியத்துவம் பெற்றவை. இந்த ஆண்டின் ஜெயந்தன் விருது பெற்றது.
துரதிர்ஷ்டம் பிடித்தக் கப்பலின் கதை : பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
அண்மையில் வெளிவந்த நூல்களில், சிறுகதைப் பரப்பில் சமகால உலகு குறித்த அவதானிப்புகளோடும் விமர்சனங்களோடும் நூலாக இதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒரே தொகுப்பில் சென்னையின் வரலாறு, பொருளாதார மந்த நிலை, சமணர்களின் குகை, இல்லாத நாய் இறந்த போவது, மெட்ரோ நகரத்தின் அல்ட்ரா மாடர்ன் மனநிலை, நிரந்தரத்துவத்தை தேடும் அதிபுனைவு உலகு என வாசிப்பு சுவாரசியமும், வியப்பும் கலந்த வரவேற்கத்தக்க புதுமையான தொகுப்பு
ட்ரங்கு பெட்டிக் கதைகள்: ஜீவ கரிகாலன்
இதில் வந்திருக்கும் ஒவ்வொரு கதையும் மற்ற கதைகளோடு முழுமையாக வித்தியாசப்பட்டிருக்கும், அதேபோல தொடர்ச்சியும் கொண்டிருக்கும். காலங்களில் உறைந்து போன பல விஷயங்களைப் பேசுவது. மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பேசும் ஹாஷ்யமிக்க ஒரு சாலையின் கதை, ஒரு தின்பண்டத்தின் கதை, ஒரு அம்மாவின் கதை, ஒரு காதலியின் கதை, ஒரு கதை சொல்லித் தாத்தாவின் கதை, ஒரு நிலா காட்சியின் கதை, ஒரு ஒவியனின் கதை என ரசனையும் அழகியலும் ததும்பும் தொகுப்பு.
மோகினி : இயக்குனர் வ.கீரா
புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலை கடந்து செல்லும் ஒரு கிராமத்தில் நிகழும் பல்வேறு சம்பவங்களை உண்மைத் தன்மை குறையாமல் அழுத்தமாகப் பதிந்திருக்கும் கதைகளடங்கிய நூல் இது. அத்தனை கதைகளுமே பெண்களை மையப்படுத்திய கதைகள் சாதிய ஒடுக்குமுறையால், அரசியலால், வறுமையால், ஆணாதிக்கத்தால், பாலியல் கொடுமைகளால், சந்தேகத்தால் இரையாகும் பெண்களின் கதைகளைப் பேசும் முக்கியக் கதைகள்.
சாத்தானின் சதைத் துணுக்கு : கிருஷ்ணமூர்த்தி
தொண்ணூறுகளில் பிறந்த கிருஷ்ணமூர்த்தியின் கதைகள், ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தை தன் சிறு வயதில் வாழ்ந்த இவரது அனுபவங்கள். வருங்காலப் படைப்பாளிகளின் முன்னுதாரணமே. சித்தாந்தங்களுக்கான எந்த சிக்கலுமற்ற, தேவையுமற்ற சிந்தனைத் தொடர்ச்சியை அவர்களுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் வழங்குகின்றன. இதுவே அவர்களது அரசியல்.
குலேபகாவலி: ஆத்மார்த்தி
ஒரு தேர்ந்த கதைசொல்லியாக ஆத்மார்த்தி, தனது வழக்கமான கதை மாந்தர்களிடமிருந்து சற்று விலகி வேறு பாதைகளில் ஓடியிருக்கிறார். பைத்தியம் என்று சமூகம் ஒருவரை தீர்மானித்து வைப்பது, திருமணத்திற்குப் பின்பும் ஏற்படும் உணர்வுவயப்பட்ட காதல், குலேபகாவலி எனும் பூவை நடித்துக் காட்ட விரும்பும் மத்தியதர வர்கத்தின் கொண்டாட்டங்கள் என சொல்லிவரும் கதைகளில். மேற்குலகில் நமக்குப் பரிட்சயமே இல்லாத இடத்தில் நடைபெறும் பணி ஓய்வு பெறும் ஒரு இராணுவ அதிகாரியின் காதல் கதை முக்கியமான கதை.
நகரத்திற்கு வெளியே
இது விஜய் மகேந்திரனின் முதல் சிறுகதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு. ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. அவரது கதைகளில் வரும் மனிதர்கள் நகரத்தின் பல்வேறு முடுக்குகளில் பிழைப்பிற்கான போராட்டத்தில் இருப்பவர்கள். அவர்களது அகச்சிக்கல்களை எந்தவித பாசாங்கும், வர்ணனையும் இன்றி நேரடியாகச் சொல்வதும், அவர்களது நெருக்கடியான வாழ்வினை, அன்றாடங்களின் பிரச்சினைகளை கச்சிதமாகச் சொல்வது விஜய் மகேந்திரனின் கதைகள்
இருமுனை – தூயன்
சித்தன்னவாசலுக்கு அருகே வாழ்வதாலோ என்னவோ, தூயனின் கதைகள் தொன்மத்துடன் ஒரு நெருக்கத்தை விரும்புகிறது அதே சமயம் நவீனக் கதை வரிசையில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறும் அத்தனை காத்திரமான கதைகளும் கொண்டதாக இந்நூல் இருக்கிறது. ஓவியங்கள், சிற்பங்கள், பாலியல் சிக்கல்களைக் கையாளும் போது கூட விரசமற்ற, ஆபாசமற்ற சொற்களைக் கொண்டு மிகத் தெளிவாகக் கையாளும் இவரது பாணி, இலக்கியத்தில், தனக்கான ஒரு இடத்தை நிச்சயமாக நிரப்பிக்கொள்ளும்.
