ஏப்ரல் 5 ரயில் மறியல் போராட்டம் – வைகோ அறிவிப்பு

Published On:

| By Balaji

தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி ஏப்ரல் 5ம் தேதி, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும், விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மாநிலம் முழுவதும் ரயில் போராட்டத்தில் பங்கேற்கும் என அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக மக்கள் அனைவரின் பசி போக்கிட, உழைத்து உணவு படைத்திடும் உழவர் பெருமக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் நட்டப்பட்டு வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில், கூட்டுறவு மற்றும் வங்கிகளில் தாங்கள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு மௌனம் சாதிக்கின்றது. கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகளின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள, ஏப்ரல் 5 இல் நடைபெறும் இரயில் மறியல் போராட்டத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் – மக்கள் நலக் கூட்டணி ஆதரவு வழங்கும் என்பதோடு, அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share