பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த வேளாண் ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 2) ஒப்புதல் அளித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்த கூட்டமைப்பே பிரிக்ஸ். இந்நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கோவாவில் கடந்த 2016 அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற்ற எட்டாவது பிரிக்ஸ் மாநாட்டில் கையெழுத்தாகியிருந்தது. அதற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிக்ஸ் நாடுகளுக்கான ஒருங்கிணைந்த வேளாண் ஆராய்ச்சி மையத்தை இந்தியாவில் அமைப்பதற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிரிக்ஸ் உறுப்பினர் நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வேளாண் துறைக்கான மேம்பாடு இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. வேளாண் வர்த்தகத்தை அதிகரித்து, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மற்றும் நலிவுற்ற ஏழைகளுக்கான வருவாயை அதிகரிக்கும் பொருட்டு இந்த மையம் மேம்படுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
