சிறப்புக் கட்டுரை : 2016- இந்திய சாதனைப் பெண்கள் பட்டியல்!

Published On:

| By Balaji

2௦16-ஆம் ஆண்டு, நம் நாட்டு பெண்கள் பல துறைகளில் சாதனைப் படைத்துள்ளனர். அதன் மூலம், இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

**மல்லிகா சீனிவாசன் – டேஃப் தலைவர்**

ADVERTISEMENT

டிராக்ட்டர்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் டேஃப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ள மல்லிகா சீனிவாசன் 2௦16-ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட சிறந்த பெண்களில் ஒருவராக உள்ளார். கடந்த 1985-ஆம் ஆண்டில் டேஃப் நிறுவனத்தின் வருவாய் ரூ.86 கோடியாக இருந்தது. இவர் பொறுப்பேற்ற பின்பு வருவாய் கோடி ரூபாயை தாண்டியது. இந்த நிறுவனம் உலக அளவில் மூன்றாவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. ஃபார்ச்சூன் இதழ் ஆசியா-பசிபிக் கண்டத்தில் செல்வாக்கு மிக்க 25 பெண்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

**கே. பாலபாரதி – பெண் அரசியல்வாதி**

ADVERTISEMENT

கே. பாலபாரதி ஒரு இந்திய பெண் அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய பொதுவுடைமை கட்சியின் சார்பாக 2006 முதல் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். பிரச்சனைகளுக்கான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கவிஞராகவும், எழுத்தாளராகவும் இருக்கிறார். பெண்களுக்காகவும், சமூக நலன்களுக்காகவும் பாடுபடுபவர்.

**எல்.சூர்யா- தடகள வீராங்கனை**

ஆசிய அளவிலான தடகள போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த எல்.சூர்யாவும் 2௦16-ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட பெண்களில் ஒருவர். இவர் சிறு வயது முதலே தடகள போட்டிகளில் அரவமுள்ளவராகா திகழ்ந்து வருகிறார். இவர், டெபில்லியில் நடைபெற்ற சீனியர் தேசிய ஓட்டப்பந்தய கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், மாநிலங்களுக்கிடையேயான தேசிய ஓட்டப் போட்டி, தேசிய ஓபன் ஓட்டப் போட்டிகளில் 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் பந்தயங்களில் தங்கம் வென்றுள்ளார். விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று சூர்யா கூறியது குறிப்பிடத்தக்கது.

**மாஷா நசீம்- தமிழகத்தின் ஐன்ஸ்டீன்**

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்த மாஷா நசீம் சிறுவயதில் இருந்தே புதிதாக ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். தன்னுடைய 9 வயது முதலே தனது அறிவை விஞ்ஞானத்தில் செலுத்தியவர். தமிழகத்தின் ஐன்ஸ்டீன் என்று அழைக்கபடுபவர். இரண்டு சர்வதேச விருதுகள், 5 தேசிய விருதுகள், ஒரு தென்னிந்திய விருது, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பரிசு என விருதுகளை பெற்றுள்ளார். மாநில இளைஞர் விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**அனு பார்த்தசாரதி- ஆடை வடிவமைப்பாளர்**

இவர் 1997-ம் ஆண்டு முதல் சிறந்த ஆடைகளை வடிவமைத்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த ரெமோ படத்தில் நடித்த ரெமோ சிவகார்த்திகேனுக்கு இவர்தான் ஆடை வடிவமைத்தார். இந்த ஆடை வடிவமைப்புக்காக அனுவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் சிம்ரன், ஜோதிகா, அனுஷ்கா என அனைத்து முன்னணி நடிகைகளுக்கும் சிறந்த உடைகளை வடிவமைத்துள்ளார். மணிரத்னம், ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரத்தின் மகள் ஆவார்.

இந்தியாவின் சிறந்த பெண்கள்!

**அருந்ததி பட்டாச்சார்யா- எஸ்பிஐ- தலைவர்**

1977-ம் ஆண்டு புரபேஷனரி அதிகாரியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிக்குச் சேர்ந்தார். 206 வருட எஸ்.பி.ஐ. வரலாற்றில், முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் கடந்த 36 வருடங்களாக எஸ்.பி.ஐ.யில் பல முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளார். 2௦16-ஆம் ஆண்டு ஆசியா-பசிபிக் கண்டத்தில் செல்வாக்கு மிக்க 25 பெண்கள் பட்டியலில் பட்டாச்சார்யா- 5-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**ஐரோம் ஷர்மிளா- இரும்பு மங்கை**

மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2௦௦௦ ஆண்டு முதல் 2௦16 வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர். சில மாதங்களுக்கு முன்பு தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். பின் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூரில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக, கூறப்படுகிறது. இதனால் தற்போது சைக்கிளில் வீதிவிதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

**சாலமருத திம்மக்கா (105)- மரங்களின் அரசி**

கர்நாடகவாவை சேர்ந்த சாலமருத திம்மக்கா (105) சுற்றுச்சூழல் ஆர்வலர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தன் வாழ்க்கையில் நேர்ந்த அனைத்து கஷ்டங்களையும் சவாலாக எடுத்துக் கொண்டு 105 வயதிலும் முடிவற்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் மூதாட்டி. கடந்த 80 ஆண்டுகளில் 8000 மரங்களை நட்டுள்ளார். பிபிசி அறிவித்த செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் இவரும் இடம் பிடித்தார். மேலும், இந்திய அரசின் தேசியக் குடிமகன் விருது -1995.ஹம்பி பல்கலைக்கழகம் வழங்கிய நடோஜா விருது – 2010 போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

**கௌரி சிந்தார்கர் (20)-ஸ்கூல் இன் தி க்ளவ்டு**

மகாராஷ்டிரா மாநிலம் சங்லியை சேர்ந்தவர் கௌரி சிந்தார்கர் (20). இவர் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் மாணவி. இப்போது “ஸ்கூல் இன் தி க்ளவ்டு” என்றழைக்கப்படும் தனித்துவ கல்வி முறையை இந்தியாவில் பயின்ற முதல் பெண் ஆவார்.

**ஒலிம்பிக் வீரங்கனைகள்**

**பி.வி.சிந்து(21)**

ஹதராபாத்தை சேர்ந்தவர் பி.வி.சிந்து(21). 2013ல் அர்ஜுனா விருதையும், 2015ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.8 வயதில் இருந்தே பாட்மிண்டன் விளையாடத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்ற நான்காவது இந்தியர் பி.வி.சிந்து.

அதைத் தொடர்ந்து,சீனா, புஷாவ் நகரில் நடந்த சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

**சாக்‌ஷி மாலிக் (24)**

ஹரியாணா மாநிலம் ரோட்டக்கை சேர்ந்தவர் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்.

2016 ஆம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக்கில் 58 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று தந்து பெருமை சேர்த்தா. ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும் பெற்றார்

**தீபா கர்மாகர்(23)**

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கர்மாகர் (23). பளு தூக்குதல் பயிற்றுனருமான அவரது தந்தை துலால் அளித்த உத்வேகத்தினால் ஜிம்னாஸ்டிக்கை முறையாக பயின்றார். கடந்த 2015 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2016ஆம் ஆண்டு, ரியோ ஒலிம்பிக்கில் புராடுநோவா பிரிவில் கலந்து கொண்ட தீபா தகுதிச்சுற்றில் மிக சிறப்பாகச் செயல்பட்டு 14.833 புள்ளிகள் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தேர்வானார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்னும் பெருமையைப் பெற்றார்.

அதைத் தொடர்ந்து, சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜிதுராய் ஆகியோருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேல் ரத்னா விருதை வழங்கி கெளரவப்படுத்தினார்.

**அயல் நாடுகளில் சாதனை படைத்த இந்திய பெண்கள்**

**டயான் குஜராத்தி (47)-நியூயார்க் நீதிபதி**

2016 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியூயார்க் மாவட்ட நீதிபதிகளில் ஒருவராக இந்திய வம்சாவளி பெண்ணான டயான் குஜராத்தியை நியமித்தார். டயான் 2012ஆம் ஆண்டு முதல் நியூயார்க் தென் மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் குற்றப்பிரிவு துணைத் தலைவர் பதவியில் பணியாற்றி வந்தார். மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவார் என ஒபாமா புகழாரம் சூட்டினார்.

**கமலா ஹாரிஸ்(51)-செனட் உறுப்பினர்**

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட் சபை தேர்தலில்ப் போட்டியிட்டு வென்றார். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் செனட் உறுப்பினராக இந்தியர் ஒருவர், குறிப்பாக பெண் ஒருவர், தேர்வானது அதுவே முதல் முறை.

**பிரமிளா ஜெயபால்-பிரதிநிதிகள் சபை**

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால், அமெரிக்க தேர்தலில் சீட்டல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபைக்கு தேர்வானார்.

**தங்கேஸ்வரி-மலேசிய பெண் சபாநாயகர்**

2016 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் தங்கேஸ்வரி, மலேசியவில் பெண் சபாநாயகராகப் பொறுபேற்றார். அதன் மூலம், இந்தியர்களின் முதலாவது, ‘பெண் சபாநாயகர்’ என்ற பெருமையை பெற்றார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share