ஜல்லிக்கட்டுப் போட்டியில் களமிறங்கிய சீனாவில் வேலைபார்க்கும் இளைஞர் காளை முட்டியதில் இன்று (மார்ச் 16) உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. yougster died at madurai jallikattu
முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளையும், பொதுக்கூட்டங்களையும் தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வருகின்றனர்.
அதன்படி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள கீழக்கரை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் மேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை துவங்கியது.
இதனை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த போட்டியில் 1000 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வாடி வாசலில் இருந்து சீறி வந்த ஜல்லிக்கட்டு காளை ஒன்று, போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர் மகேஷ்பாண்டியின் மார்பில் குத்தி வீசியது.
இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியின் மகனான மகேஸ் பாண்டியன், எம்.காம் படித்து விட்டு சீனாவில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், இன்று ஜல்லிக்கட்டில் பங்கேற்ற நிலையில் மாடுமுட்டி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.