சூளைமேட்டில் திறந்து கிடந்த தொட்டியில் வாய் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை சூளைமேட்டில் வீரபாண்டி நகர் முதல் தெருவில் அண்மையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. அது மூடப்படாமல் இருந்த நிலையில் இன்று காலையில் நடைப்பயிற்சி சென்ற 45 வயது பெண் விழுந்ததாகவும் இதையடுத்து காயமடைந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பெண் மீட்கப்பட்டது மழை நீர் வடிகால் பள்ளம் அல்ல என்றும் அது சிறிய அளவிலான வண்டல் வடிகால் தொட்டி என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் அந்த பெண் அதில் விழுந்து உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் காவல் துறை விசாரணைக்குப் பின்னரே அந்த பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றும் சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட பெண்ணின் வாய் கட்டப்பட்ட நிலையிலிருந்ததாகவும் இது குறித்தும் காவல்துறை தரப்பில் உரிய விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
