சீனாவின் டிக்டாக் மீதான தடை நீக்கப்படவில்லை என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், புதிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தகவலை LinkedIn-ல் வெளியாகியுள்ளது. இதனால் அச்செயலி மீண்டும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் பயனர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா காலத்தில் இந்தியாவில் வேகமாக பரவிய செயலிகளில் ஒன்று டிக்டாக். சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுக்குச் சொந்தமான இந்த டிக்டாக் செயலியை, அப்போது இந்தியாவைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வந்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள இந்திய – சீன எல்லையில் இரு நாட்டு ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர்.
இதனால் சீனாவுடனான உறவுகள் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 29, 2020 அன்று, தரவு பாதுகாப்பு விதிமுறை மீறல்களை காரணம் காட்டி டிக்டாக் மற்றும் சீனாவிற்கு சொந்தமான 58 செயலிகளை மத்திய அரசு திடீரென தடை செய்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சீனாவின் டிக்டாக், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அலிஎக்ஸ்பிரஸ் மற்றும் பெண்கள் ஆடை தளமான ஷீன் ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
எனினும் டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்ததாக என பயனர்கள் கூறிய மத்திய அரசு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் தடாலடியாக மறுத்தது.
டிக்டாக்கிற்கான தடையை நீக்கும் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், இதுபோன்ற எந்தவொரு அறிக்கையும் தவறானது மற்றும் அது மக்களை தவறாக வழிநடத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் ஊழியர்களைப் பணியமர்த்தும் வகையில், புதிய பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தகவலை LinkedIn தளத்தில் வெளியிட்டுள்ளது டிக்டாக் நிறுவனம்.
கடந்த 2019-ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவுக்கு செல்வதை பிரதமர் மோடி முழுமையாக புறக்கணித்து வந்தார்.
தற்போது அமெரிக்காவின் கடும் வரிவிதிப்பு மற்றும் இருநாட்கள் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் (எஸ்சிஓ) பங்கு பெற வேண்டி, ஜப்பானின் டோக்கியோவில் இருந்து நேரடியாக சீனாவின் தியான்ஜின் நகருக்கு இன்று செல்கிறார்
கடைசியாக 2018 ஜூனில் குயிங்தவோ நகரில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்ற பிரதமர் மோடி, தற்போது சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா சென்றுள்ளதால், டிக்டாக் செயலி மீதான தடை நீக்கப்படலாம் என பயனர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
