அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இஸ்ரேலிய தூதரகத்தின் அதிகாரிகளான காதலர்கள் இருவரை சுட்டுக்கொன்றது தொடர்பாக போலீசாரிடம் கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். Why were 2 Israeli diplomats shot dead? – Killer confesses!
அமெரிக்காவின் வாஷிங்டனில் capital Jewish என்ற மியூசியம் உள்ளது. இது வெள்ளை மாளிகைக்கு இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு கடந்த புதன்கிழமை இரவு யூதர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர். Why were 2 Israeli diplomats shot dead? – Killer confesses!
நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனைவரும் மியூசியத்தை விட்டு வெளியே வந்தபோது, அங்கிருந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். அதில் யாரோன் லிஷின்ஸ்கி (30) மற்றும் சாரா மில்கிரிம் (26) என இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காசா மக்களுக்காக துப்பாக்கிச் சூடு!
பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து ஓடாமல், போலீஸ் வருகைக்காக காத்திருந்து 10 நிமிடங்களுக்கு பிறகு கைதானார். அப்போது அவர்களிடம் ’காசா மக்களுக்காக தான் இதை செய்தேன். பாலஸ்தீனுக்கு விடுதலை வேண்டும்’ என கூச்சலிட்டார்.
தொடர்ந்து நடத்திய போலீஸ் விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்த நபர், சிகோகாவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்பது தெரியவந்தது. காசாவுக்கு ஆதரவு நிலைப்பாடு கொண்ட அவர், இஸ்ரேலின் காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கொலைகளை செய்தது தெரியவந்தது.
மேலும் கடந்த ஆண்டு பாலஸ்தீன விடுதலைக்காக இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தன்னைத்தானே தீக்குளித்துக்கொண்ட ஒரு விமானப்படை ஊழியரால் தான் ஈர்க்கப்பட்டதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதே போல, கொலை செய்யப்பட்ட இஸ்ரேலிய தூதர்கள் யாரோன் மற்றும் சாரா இருவரும் காதலித்து வந்ததும், அவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக அமெரிக்க யூதக் குழுவின் தலைமை நிர்வாகி டெட் டியூட்ச் கூறுகையில், “சாராவும் யாரோனும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டனர். அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் சிரித்தபடி நிகழ்வை கண்டுகளித்தனர். அவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருந்தனர். இந்த மிகப்பெரிய துயரச் சம்பவத்தால் நாங்கள் அதிர்ச்சியிலும் மனவேதனையிலும் இருக்கிறோம்” என்று கூறினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்!
தொடர்ந்து எலியாஸ் ரோட்ரிக்ஸ், வாஷிங்டனில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, துப்பாக்கிச் சூட்டிற்கு முன்னதாக எலியாஸ் அருங்காட்சியகத்திற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதற்கான ஆதாரங்களை FBI அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து எலியாஸை காவலில் வைத்திருக்க உத்தரவிட்டு அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
எலியாஸ் மீது கொலை, அத்துமீறி ஆயுதங்களை பயன்படுத்துதல், வெளிநாட்டு தூதரக அதிகாரிகளைக் கொலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் உச்சம்!
முன்னதாக இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ”யாரோனும் சாராவும் யூதர்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்கள். இது யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தின் உச்சம்” என குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ”இந்த இரட்டை கொலைக்கு யூத விரோதம் தான் அடிப்படை. இதோடு இதற்கு முடிவு கட்டுவோம். வெறுப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு அமெரிக்காவில் இடமில்லை’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த இரட்டைக் கொலையைத் தொடர்ந்து நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள இஸ்ரேல் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.