சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி அ.இ.பு.த.ம.மு.க தலைவர் அதிரடி அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

VK Sasikala

வி.கே.சசிகலா தேர்தல் நேர பகடைக் காயாக எங்களை பயன்படுத்திக் கொண்டார். அதனால் அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குகிறோம் என அதன் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எனக் கூறப்படும் சசிகலாவை நீக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஏனென்றால், கடந்த 2026 ஆம் ஆண்டு எங்களது கட்சியில் அவர் பணியாற்ற வந்து சேர்ந்தார். கட்சியின் பொறுப்புகளையும் அவர் ஏற்றுக்கொண்டார்; ‘கட்சியை வழிநடத்துவேன்’ என்றுதான் என்னிடம் கூறினார். ஆனால், அதன்படி அவர் செய்யவில்லை. கட்சியில் வேட்பாளர்களை அறிவித்ததெல்லாம் எனக்குத் தெரியும். தேர்தல் முடிந்த பிறகு கட்சியை வழிநடத்துவோம் என்று கூறிவிட்டு, அவர் எங்களை யாரையும் சந்திக்கவில்லை; தொண்டர்களையும் சந்திக்கவில்லை.

ADVERTISEMENT

எத்தனையோ முறை தொண்டர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுவிட்டேன். ஆனால், அங்கே எந்த அனுமதியும் கிடையாது. ‘யாரும் வர வேண்டாம், கேட்டுச் சொல்கிறேன்’ என்று கூறுகிறார்கள்; பார்ப்பதற்கும் அனுமதி இல்லை. ஒரே ஒரு முறை மட்டும்தான், கட்சியில் சேர்வதற்கு முன்னால் எங்களது கட்சியின் நிலைப்பாட்டை நன்றாக ஆராய்ந்து, நான் ஒழுங்காக நடத்துகிறேனா, தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி நடத்துகிறேனா என்று பார்த்துவிட்டு கட்சியில் இணைந்தார்.

தேர்தலுக்காகத்தான் எங்களை பகடை காயாகப் பயன்படுத்திக் கொண்டார் சசிகலா என்று இப்போது புரிகிறது. அதற்குப் பிறகு எந்தவிதமான ஒரு தொடர்பும் இல்லை, யாரையும் சந்திக்கவில்லை என்ற மனவேதனை எனக்குள் இருந்தது. இதனால் கழகத் தோழர்கள் அனைவரிடமும் ஆலோசித்த பின், அவரைச் கட்சியிலிருந்து நீக்கியுள்ளோம்.

ADVERTISEMENT

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் தேர்தல் நடைபெறும். பிப்ரவரி மாதம் எங்களது கட்சியில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பான ஆலோசனைக் கூட்டத்தில் வி. கே. சசிகலாவை நீக்க முடிவு செய்துவிட்டோம். முறையாக பிப்ரவரி மாதம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நீக்கிவிடுவோம்; அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் சந்தேகமும் இல்லை. எங்கள் பணியை நாங்கள் மீண்டும் தொடர்வோம். அனைத்துத் தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம். புரட்சித் தலைவரின் கொள்கைகளை நாங்கள் விடாமல் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share