தமிழகத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக சார்பில் மீண்டும் போட்டியிடுபவர்களிடம் இடைத்தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், பி.சத்தியபாமா, டாக்டர் இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர், தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது காலத்திலேயே தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் அந்தத் தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் கே.சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஒரு தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர் தனது சொந்த அல்லது அரசியல் காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்தால், மீண்டும் தேர்தல் நடத்துவதற்கான செலவையும் மக்களே ஏற்க வேண்டியுள்ளது. ஒரே தொகுதிக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன் இரண்டு முறை செலவிட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள், அந்தத் தேர்தலை நடத்துவதற்கான செலவுக்கு இணையான தொகையை முன்பணமாகச் செலுத்த வேண்டும். அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் அந்தப் பணத்தைத் திருப்பித் தரலாம். தோல்வியடைந்தால் பணத்தைப் பறிமுதல் செய்யலாம். இதற்காகத் தனியாக ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
அத்துடன், உரிய காரணமின்றி பதவியை ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், இதுபோன்ற புதிய விதிகளை உருவாக்குவது அரசின் அல்லது சட்டமன்றத்தின் வேலை. நீதிமன்றம் உத்தரவிட்டு இத்தகைய விதிகளை உருவாக்கச் சொல்ல முடியாது எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதையடுத்து வழக்கறிஞர் கே.சுதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கெனவே டெபாசிட் தொகை செலுத்துகின்றனர். அதேபோல, தனது ராஜினாமாவால் இடைத்தேர்தல் நடைபெறக் காரணமான வேட்பாளரிடம் கூடுதல் முன்பணம் கேட்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
இப்படிப் பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை, தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நீக்கமாகுமா அல்லது தேர்தல் தொடர்பான ஒரு விதியாக மட்டுமே கருதப்படுமா என்ற சட்டக் கேள்வியையும் முன்வைத்தார்.
மேலும், மக்கள் அளித்த வெற்றியையும் தேர்தலுக்காகச் செலவிடப்பட்ட பொதுமக்களின் வரிப்பணத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த எவ்வளவு பணம் செலவிடப்பட்டது அல்லது செலவிடப்பட உள்ளது என்ற விவரங்களைத் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்த வழக்கு நேற்று (அக்.27) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
