”வெற்றிமாறனின் ‘விடுதலை ‘ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில்… மூலக் கதை யாருடையது என்று சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன.
ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையின் சினிமா வடிவம் என்று சொல்லப்பட்ட நிலையில்… அந்த கதையின் ஒரு வரிகூட காட்சிப்படுத்தப் படவில்லை என எழுத்தாளர் சுகுணா திவாகர் தெரிவித்துள்ளார்.
”விடுதலை படத்தில் வரும் ஒர்க் ஷாப் காட்சிகள் அனைத்தும் ’சோளகர் தொட்டி’ நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. நாவலின் ஆசிரியரின் அனுமதி பெறப்படவில்லை. இது அப்பட்டமான கதைத் திருட்டு ஆகும்” என்று வழக்கறிஞரும், எழுத்தாளருமான இரா.முருகவேள் குற்றம் சாட்டி உள்ளார்.
சோளகர் தொட்டி நாவல்
ஒருபுறம் சந்தனக் கடத்தல் வீரப்பன், மறுபுறம் தமிழக-கர்நாடக அதிரடிப்படை போலீஸார். இவ்விரு முனைத் தாக்குதலில் சிக்கிச் சின்னாபின்னமாயினர் ’சோளகர்’ என்னும் பழங்குடி மக்கள். பல சோளகர் பழங்குடி கிராமங்கள் பாதிப்புக்குள்ளானாலும் அதிகபட்ச சேதம் சோளகர் தொட்டிக்குதான்.சமவெளிப் பகுதியிலிருந்து மலைப் பகுதியில் ஊடுருவியவர்கள் அரசின் உதவியோடு பழங்குடிகளின் நிலத்தை அபகரித்தனர். வீரப்பனும் வீரப்பனைப் பிடிக்கச் சென்ற இரு மாநில அதிரடிப்படைகளும் பழங்குடிகள் காட்டுக்குள் தொடர்ந்து வாழ்வதையே கேள்விக்குள்ளாக்கினார்கள்.
வனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் அவர்களின் வனத்துக்குள் செல்லவே தடை விதிக்கப்பட்டனர். சந்தன மரத்தின் கிளையைக்கூட ஒடித்துப் பழக்கப்படாத பழங்குடிகள் மீது சந்தனக் கடத்தல் குற்றச்சாட்டு வழக்குகள். ‘வீரப்பனைத் தேடுதல்’ என்ற பெயரால் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளில் ஒரு பகுதியை எடுத்துரைப்பது ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ நாவல்.

தங்கள் நிலத்தில் விளைவிப்பது ஒரு போகம் ராகிப் பயிர் மட்டுமே. அதனை விதைக்கும்போது, “காத்தவர் தின்னது போக, கண்டவர் தின்னது போக, கள்வர் தின்னது போக விளைய வேணும் சாமி” எனக் கும்பிட்டு விதைக்கும் பரந்த மனம் கொண்டவர்கள். வனத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதையே பெரிய சொத்தாகக் கொண்டவர்கள். சமவெளிப் பகுதி மக்கள் இவர்களிடம் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது. இந்த உயர் பண்பாட்டுக் கூறுகள் நாவலின் முதல் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.இப்பெருவாழ்வு வாழ்ந்த மக்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பது நாவலின் இரண்டாம் பகுதி.
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய விடுதலை திரைப்படம் மார்ச் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. படம் கலவையான விமர்சனத்தையும் பெற்று வரும் நிலையில் விடுதலை படத்தில் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையின் ஒரு வரிகூட காட்சிப்படுத்தப்படவில்லை என எழுத்தாளர் சுகுணா திவாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தில் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையின் ஒரு வரிகூட காட்சிப்படுத்தப்படவில்லை.
மேலும் தமிழ்நாடு நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறோ வாழ்க்கையோ இல்லை. ஆங்காங்கே அரியலூர் குண்டுவெடிப்பு, தமிழரசனையும் கலியபெருமாளையும் நினைவுபடுத்தும் சில சாயல்கள் மட்டும் இருக்கின்றன. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் என்ற மறைமுகக் குறிப்புகளும் உண்டு. ஆனால் முதன்மையாக சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் பகுதிகளில் செயற்படும் மாவோயிஸ்ட் இயக்கம், பாக்சைட் சுரங்கத்துக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகள் போன்றவைதான் தமிழ்ப்படுத்தப்பட்டு பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் நக்சல்பாரிகளின் ஆயுதச்செயற்பாடுகள் 60களின் பிற்பகுதியில் தொடங்கி 80ல் முடிந்துவிட்டன. கனிமவளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு எதிரான மாவோயிஸ்ட்களின் போராட்டங்கள், அவர்களுக்கு எதிரான அரசின் ‘ஆபரேஷன் க்ரீன் ஹண்ட்’ (இது படத்தில் ‘ஆபரேஷன் கோஸ்ட் ஹண்ட்’டாக மாற்றப்பட்டுள்ளது) மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் (2009 – 2014) நடந்தவை. ஆனால் திரைப்படத்தில் கதை நிகழும் காலம் 1987. உலகமயமாக்கலுக்குப் பிறகான கார்ப்பரேட் நிறுவன ஆதிக்கத்தை ஏன் 87ல் காட்சிப்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை.
காவல்துறை சித்திரவதைக் காட்சிகள் வீரப்பன் தேடுதல் வேட்டை, பழங்குடி மக்கள் மீதான காவல்துறை வன்முறை, சோளகர் தொட்டி ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன” என்று கூறியுள்ளார் சுகுணா திவாகர்.
இதனிடையே, “விடுதலை படம் அப்பட்டமான கதைத் திருட்டு என்று எழுத்தாளர் இரா.முருகவேள் குற்றம் சாட்டி உள்ளார்.
“விடுதலை படத்தில் வரும் ஒர்க் ஷாப் காட்சிகள் அனைத்தும் சோளகர் தொட்டி நாவலில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன. நாவலின் ஆசிரியரின் அனுமதி பெறப்படவில்லை. இது அப்பட்டமான கதைத் திருட்டு ஆகும்.தேவாரம் தலைமையிலான நக்சல் ஒழிப்பு ஆபரேஷன் அஜந்தா நடந்தது தர்மபுரி மாவட்டத்தில். 1980 ஆம் ஆண்டு. தமிழ்நாடு விடுதலை படை நடத்திய அரியலூர் ரயில் பாலம் குண்டு வெடிப்பு நடந்தது 87 இல் என்று நினைக்கிறேன். கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். ஈரோடு மாவட்டம் மாதேஸ்வரன் மலையில் ஒர்க் ஷாப் என்று அழைக்கப்பட்ட கட்டடத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டது 93 to 95, 96 வீரப்பன் வேட்டையின் போது.

இந்த மூன்றுக்கும் சம்பந்தமே இல்லை. சொல்லப்போனால் மக்கள் யுத்தக் கட்சியும், தமிழ் நாடு விடுதலைப் படையும் தங்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் காட்டிற்கு பின்வாங்கி இருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது. பின்பு சில பத்து பேராக விடுதலைப் படை சுருங்கிய பின்பே வீரப்பனுடன் சேர்ந்தார்கள். அதுவும் குறுகிய காலம் மட்டுமே. மூன்று வெவ்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கலந்து குழப்பி திரித்து படம் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இது இயக்குனரின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், “ இந்த திருட்டில் ஜெயமோகனுக்கு பங்கு இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இன்னொருவர் கதைக்கு தான் பெயர் போடும் போது கூசி இருக்க வேண்டும். ஆனால் தனக்கும் இது பற்றியெல்லாம் தெரியும், படத்தில் வரும் இந்த விஷயங்களில் தனக்கும் பங்கு உண்டு என்பது போல பாசாங்கு செய்து அவர் பேட்டி கொடுத்து வருவது சுயமரியாதை அற்ற தன்மையை காட்டுகிறது.
தமிழ் நாட்டில் படித்த அரசியல் உணர்வுள்ள பார்வையாளர்கள் தங்கள் புல்லரிப்பு மனநிலையில் அரசு எதிர்ப்பு படம், அடக்குமுறையை அம்பலப்படுத்தும் படம் என்று அவசரப் பட்டு கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும். அபத்தங்கள் போலிகளை புரிந்து கொள்வது அறிவுபூர்வமான ரசனையின் முக்கிய அம்சமாகும்” என்று எழுத்தாளர் இரா.முருகவேள் கூறியுள்ளார்.
இதனிடையே விடுதலை படத்தின் தொடக்கத்திலேயே படத்தின் தொடக்கத்திலேயே ‘எல்லாமே நூறுசதவீதம் கற்பனை. யாரையாவது எந்தச் சம்பவத்தையாவது நினைவுபடுத்துவதாக இருந்தால் அது தற்செயலே’ என்று வெற்றிமாறன் படத்தின் தொடக்கத்திலேயே அவருடைய குரலிலே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்