பேரா.நா.மணி
1998 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்துவான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாத கால பணியிடை பயிற்சி. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில பேராசிரியர்களும் அதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில், தமிழ் நாட்டைச் இருவர் மட்டுமே பிரபலமாக அறியப்பட்டு இருந்தனர். ஒருவர் ஜெயலலிதா மற்றொருவர் வீரப்பன். அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து வரை மட்டுமல்ல, பன்னாட்டு அளவிலும், வீரப்பன் நன்கு அறியப்பட்டே இருந்தார்.
வீரப்பனால், அச்சமும் பீதியும் நிறைந்த காலம் ஒன்று இருந்தது. அதனால் அவனைப் பற்றிய வீர தீரக் கதைகளும் சேர்ந்தே எழுந்து இருந்தது. எது உண்மை? எது பொய்? யாருக்கும் தெரியாது. வனத்துறை, காவல் துறையை சார்ந்தவர்களுக்கு இந்த அச்சமும் பீதியும் திகிலூட்டியது. கோபம் வெறுப்பு கலந்தும் இருந்தது. 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மலைப்புற அறிவியல் விழிப்புணர்வு கலைப் பயணம்” என்ற ஒன்றை நடத்தியது. இது மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை உதவியோடு நடத்தப்பட்டது. இந்தக் கலைக் குழு, மலைக்குள் செல்ல அதிரடிப்படை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை ஆகிய இரண்டும் இரண்டு வாகனங்களில், இருபது ஆயுதம் தாங்கிய போலீசாரோடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. சிறுநீர் கழிக்கக் கூட இரண்டு ஆயுதம் தாங்கிய போலீசார் உடன் வந்தனர். இதன் விளைவாக, பொது மக்கள் கண்டுகளிக்க வேண்டிய கலைநிகழ்ச்சிகளை அதிரடிப்படை காவலர்கள் மட்டுமே பார்க்கும் அவலம் ஏற்பட்டது.
இத்தகைய வீரப்பனைப் பற்றி வெளி வந்துள்ள செய்திகள், அவன் யாரையேனும் கடத்தி வைத்து இருத்தல், சுட்டுக் கொல்வது ஆகிய நேரங்களில் வரும் செய்திகள் எனப் பலவும் உணர்ச்சி பூர்வமாகவே இருந்தது. அந்த செய்திகளில் பல ஒன்று, மிகை மதிப்பீடாக இருந்தது. அல்லது, குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்த இரண்டுக்கும் இடையில் வீரப்பன் யார்? அவனது உண்மையான வரலாறு என்ன? என்று அறிந்து கொள்ள தக்க ஆதாரப்பூர்வமான புத்தகங்களே இல்லை என்றே கூற வேண்டும். வீரப்பன் பற்றிய மிகை மதிப்பீடு அல்லது குறை மதிப்பீடு அல்லது அவதூறு என்பதைத் தாண்டி, வீரப்பன் யார் என்பதற்கு சிறு விளக்கம் அளித்த புத்தகம் ” வீரப்பனுடன் பதிநான்கு நாட்கள்” என்ற புத்தகம் மட்டுமே. கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்ட வன உயிரியல் பத்திரிகையாளர்கள் தாங்கள் வீரப்பனோடு இருந்தது பற்றி எழுதிய புத்தகம் அது.
**வீரப்பன் நூலின் உருவாக்கமும் சிக்கல்களும்**
**இந்தக் குறையை போக்கியது மட்டுமல்ல, வீரப்பனின் முழு உண்மை வரலாற்றையும் தமிழ் சமூகத்திற்கு படைத்து அளிக்கும் பணியை பத்திரிக்கையாளர் பெ. சிவசுப்பிரமணியம் மேற்கொண்டுள்ளார்.** தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழும் மக்கள், காவல் துறை, வனத்துறை, மத்திய மாநில அரசுகள் ஆகிய எல்லோருக்கும் உண்மையில் இது ஒரு பாடப்புத்தகம். வனம், வன உயிரிகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், பாதுகாப்பு, அதன் மேலாண்மை போன்ற விசயங்களில் தக்க விழிப்புணர்வு கல்வியை இப்புத்தகம் கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” என்ற இந்த நூலின் ஆசிரியர் சிவசுப்பிரமணியம், இவ்வளவு காத்திரமாக, இந்தப் படைப்பை உருவாக்க என்ன காரணம்? ஒரு பத்திரிகையாளராக யாரும் செய்யத் துணியாத இந்த பணியை செய்ய வேண்டும் என்ற துணிவும், நேர்மையும், என்ன விலை கொடுத்தேனும் வெளி உலகிற்கு இந்த விசயத்தை சொல்லியே ஆக வேண்டும் என்ற பத்திரிகை அறம் சார்ந்த அற்பணிப்பு உணர்வுமே காரணம். அந்த அற்பணிப்பு உணர்வுக்காக அவர் கொடுத்த விலை மிக மிக அதிகம். இதைவிடவும் மோசமான சிக்கல்கள் சவால்கள் அடக்குமுறைகளை சந்தித்து தான் எதிர்கால சக பத்திரிகையாளர்கள் சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என்பதற்காக இவர் வாழ்ந்து காட்டி உள்ளார் என்றும் கூறலாம்.
**கொலை, கொலை முயற்சி, கொள்ளை, கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல் என்று எட்டு கடுமையான பொய் வழக்குகளை இதன் நிமித்தம் அவர் சந்திக்கிறார்.** ஊடகத் துறையில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பாக இருக்கும் சட்டங்கள் கூட பயன்படாத அளவுக்கு கிரிமினல் வழக்குகள் அவர் மீது புனையப்படுகிறது. இந்த எட்டு வழக்குகள், கொள்ளேகால், சாம்ராஜ்நகர், மைசூர், கோவை, கோபி என பல நீதிமன்றங்களில் நடைபெற்றது. இந்த வழக்குகள் காரணமாக அவரது வாலிப வயது முழுவதும் (32 வயது முதல் 42 வயது வரை) நாசமடைகிறது. வழக்குகளில் ஆஜராக, வாய்தா பெற என்று பத்தாண்டுகள் கழிந்து விடுகிறது. **இதற்காக, இவர் 4,85,000 கிலோமீட்டர் இரவு பகலாக பயணம் செய்து உள்ளார். 1993 ஆம் ஆண்டு முதல் 2000 வரை, பல்வேறு காலகட்டங்களில் வீரப்பனை சந்தித்து பேட்டி எடுத்து வெளி உலகிற்கு சொன்னது இவரது மிக முக்கிய பங்களிப்பு.**
இப்போது இவர் “வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதனைப் படிக்கும் போது, வீரப்பன் வரலாற்றை நூலாகக் கொண்டு வர, நூலாசிரியர் சிவசுப்பிரமணியம் எடுத்த முயற்சிகள் தெரிகிறது. சுமார் 1000 பேரை இதற்காக சந்தித்து உரையாடி உள்ளார். அந்த வனம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து உள்ளார். நம்மையும் கூட அவரோடு பயணிக்க வைக்கிறார். வீரப்பன் வரலாற்றில் தொடர்புடைய பல மனிதர்களின் அரிய புகைப்படங்கள், சம்பவங்கள் நடந்த இடங்கள் எனத் தேடிச் சேர்த்துள்ளார். வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை உயிர் துடிப்பான நடையில் கொண்டு செல்வதில் வெற்றி கண்டுள்ளார். நூலைக் கையில் எடுத்தவர் எவரும், படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத விறுவிறுப்பான நடை, உட்கரு. அற்புதமான புனைவு இலக்கியவாதிகள், மிகச் சிறந்த துப்பறியும் கதாசிரியர்கள் என யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத உள்ளடக்கம். திருப்பங்கள்… சம்பவங்கள்… இவை திகிலூட்டுகிறது. மனதை படபடக்க செய்கிறது. இதயத்தை வலிக்கச் செய்கிறது. கண்ணீரையும் வர வரவழைக்கிறது. பலவிதமான எண்ணங்களை உருவாக்குகிறது. அந்தக் காட்டை விட்டு வெளியே வர மனம் மறுக்கிறது.
வீரப்பன் வரலாற்றின் முதல் பகுதி, நமக்கு என்ன சொல்கிறது? மேட்டூர் அணை கட்ட அங்கிருந்து வெளியேற்றப்பட்ட வீரப்பன் உள்ளிட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திருந்தால் இந்த அவலச் சுவை மிகுந்த வரலாறு உருவாகாமல் தடுக்கப் பட்டிருக்குமோ? வனத்தில் வாழும் மக்களுக்கு, அவர் தம் வயிற்றுப் பாட்டிற்கு உத்தரவாதம் உறுதி செய்யப்பட்டிருந்தால் மதிப்பிடவே முடியாத யானைத் தந்தம், சந்தன மரங்கள் உள்ளிட்ட செல்வங்கள் கொள்ளை போனது தடுக்கப் பட்டிருக்குமோ? வனத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய துறைகளின் ஊழியர்கள், அத்தி பூத்தது போல வெகு சிலரே அத்துறையின் நோக்கங்களுக்கு ஏற்றவர்களாக இருக்கிறார்கள். அது தான் இந்த அவலத்திற்கு காரணமா?
தமிழக கர்நாடக அதிரடிப்படையில் பி. ஸ்ரீ நிவாஸ், சிதம்பரம் போன்று விரல் விட்டு எண்ணும் அளவிலான ஊழியர்களே காட்டின் உண்மையான காவலர்களாக உள்ளனர். உயிரைப் பணயம் வைத்து உயிர் கோளத்தின் ஒரு பகுதியை பாதுகாக்க துடித்து உள்ளனர். உயிரைப் பணயம் வைக்க தயாராக உள்ளனர். எல்லோரும் இவ்விருவராக இருந்திருந்தால் வீரப்பன் எப்போதே பிடிபட்டு இருப்பானே! அல்லது உருவாகாமல் கூட தடுக்கப் பட்டிருக்குமோ? அப்படி இல்லாமல் பெரும்பாலானவர்கள் அரசுத் துறைகளில் அதன் அடிப்படை இலக்குகளுக்கு எதிராக இருப்பது எதனால்? அரசியல்வாதிகள் ஆக்கமும் ஊக்கமும் இல்லாமல் இருந்தால் இத்தகைய செயல்கள் நடைபெறுவது கட்டுப்படுத்தப்பட்டு இருக்கலாமோ? இவை எல்லாம் தாண்டி பணம் பணம் பணம் என்ற படத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பொருளாதார சூழல் தான் காரணமா? என்ற கேள்விகளை இந்த புத்தகம் வீரப்பன் வாழ்க்கை வழியாக ஆழமாக எழுப்புகிறது.
வீரப்பனுக்கு பிந்தைய வனம், வன வளம், விலங்குகள் எப்படி இருக்கிறது? வீரப்பன் மரணத்திற்கு பிறகு வனத்திற்குள் உருவாகியிருக்கும் இராட்சத பண்ணைகள், ஆழ்துளை கிணறுகள், வெட்டப்பட்ட மரங்கள், அங்குள்ள பணப் பயிர்கள் உறிஞ்சி குடிக்கும் நீர், ரிசார்ட்டுகள், உயர்ந்து நிற்கும் நிலத்தின் மதிப்பு இவை எல்லாம் எந்தவிதமான பாதிப்புகளை வனத்தின் மீது உருவாக்க இருக்கிறது? என்று நினைத்து பார்க்க கூட யாருக்கும் இப்போது நேரமில்லை. அப்போது வீரப்பன் ஒருவரே இப்போது?
வயிற்றுப் பாட்டுக்காக, வீரப்பனுக்கு உதவி செய்த ஒரு சில வன மக்கள், பழங்குடிகள் ஆகியோருக்காக ஒட்டு மொத்த வன மக்களின் வாழ்க்கை முறையே மாறிப்போகும் வேலையை தமிழக கர்நாடக வனத்துறை காவல் துறையினர் செய்து விட்டனர். அம்மக்களின் சமூக பொருளாதார பண்பாட்டு வாழ்வில் செயல்முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வனத்தை எப்படியெல்லாம் பாதிக்கும்! இதைப் பற்றிய கணிப்புகள் யாரிடம் உள்ளது? இந்த கேள்விகளையும் சேர்த்தே தான் இந்தப் புத்தகம் எழுப்புகிறது.
வீரப்பன் ஓர் காவிய நாயகன் போன்ற ஓர் பிம்பத்தை கட்டி எழுப்பும் முயற்சியும் நடைபெறுகிறது. அது வீரப்பன் உயிரோடு இருக்கும் போதே தொடங்கி ஆட்டம். அதற்கும் இந்த நூலில் பதில் இருக்கிறது. யானைத் தந்த வேட்டை, சந்தனக் கட்டை கடத்தல், காடுகள் அழிப்பு ஆகியவற்றை பாதுகாக்க புறப்பட்ட கதாநாயகன் பி. ஸ்ரீ நிவாஸ், அவனது தோழர்கள் சிதம்பரம் போன்றோர் ஆட்டத்தின் துவக்கத்திலியே மிக மிக கொடூரமான முறையில் வில்லன் வீரப்பனால் கொலை செய்யப்பட்டு விடுகிறார்கள். கதாநாயகனாக இருந்துதிருக்க வேண்டிய வனத்துறை, சில தனிநபர்களை கதாநாயகன் வேடம் புனைய வைக்கிறது. இதை அறிந்து கொண்ட வில்லன், கதாநாயகர்களை துவக்கத்திலேயே துவம்சம் செய்து விடுகிறான். வீரப்பன் வரலாறு வழியாக வனத்துறை கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம் இது.
வீரப்பனாலும், அதற்கு முன்பும் பின்பும் அழிக்கப்பட்ட வனத்தை சரியாக மதிப்பீடு செய்யவும் இல்லை. வீரப்பனின் இதிகாசத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் இல்லை என்றே தோன்றுகிறது.
வீரப்பன் வரலாற்றின் வழியாக, காடுகள், சந்தன மரங்கள் எப்படி வெட்டிச் சாய்க்கப்பட்டது? எப்படி யானைகள் வானம் இடறும் படி துடிதுடித்து செத்தன? ஒரு நாள் வயிற்றுப் பாட்டுக்கு நான்கு நாட்கள் ஆறு கிலோ எடை கொண்ட மூங்கில்களை தூக்கித் திரிந்தனர்? அந்த மக்களை இரக்கமில்லாமல் மோகனையா தினேஷ் வகையராக்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்று குவித்தார்கள் என்று மட்டும் சொல்லவில்லை? இனி வரும் காலங்களில் இந்த வனத்தை எப்படி பாதுகாப்பது என்ற விடைகளும் இந்தப் புத்தகத்தில் புதையுண்டு கிடக்கிறது. ஒரு ஆரோக்கியமான சமூகம், அதனைத் தேடிப் படித்து, ஆற அமர யோசித்து விடைகளை தேடத் தயாராக வேண்டும்.
நிலக்கரியோ பெட்ரோலோ ஒரு முறை தோண்டி எடுத்துவிட்டால் திரும்பவும் உற்பத்தி செய்ய இயலாது. ஆனால் வனம் உயிர்த்தெழும் ஆற்றல் படைத்தது. ஆனால், அதற்கு ஒரு காலமும் இடைவெளியும் இருக்கிறது. அந்த கால இடைவெளியில் இந்தப் பணிகளை செய்து முடிக்கப் போகிறோமா ? என்ற கேள்வியையும் பெரு மூச்சையும், சிவசுப்பிரமணியம் அவர்களின் ” வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்” பகுதி ஒன்று ஒருசேர எழுப்புகிறது. அத்தோடு, மீதமுள்ள வீரப்பனின் வாழ்வு, அது நிகழ்த்திய பயங்கரம். வீரப்பன் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரம், அவனால் வீழ்ந்து பட்ட மக்கள், செத்து மடிந்த சந்தன மரங்கள்… என்று தெரிந்து கொள்ள சிவா அவர்களின் அடுத்த பகுதிக்காக படபடப்போடு மனம் காத்துக் கிடக்கிறது.
**நூலின் விலை: ரூபாய்: 400/-**
**வெளியீடு:**
489/A அண்ணா நகர்
ஆத்தூர்-636102
சேலம் மாவட்டம்.
தொடர்புக்கு: 94434 27327�,”