திமுக அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில் தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் தவெக கட்சி சார்பில் திறக்கப்பட்ட மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் திருவள்ளுவருக்கு ருத்ராட்சம் மற்றும் நெற்றியில் திருநீறு, பாரத மாதா படம் வரையப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
இதுகுறித்து பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி, “சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.
கடந்த கால திமுக அரசு இந்து சமய அடையாளங்களை அழித்தும், சனாதன தர்மக் கோட்பாடுகளை இழிவாகப் பேசியும் வந்த நிலையில் தற்போது இந்து மத அடையாளங்கள் பழமையான தோற்றங்களுடன் மீண்டும் உயிர்பெற்று வருவது மகிழ்ச்சி.
மேலும் தொடர்ந்து இந்து மத வழிபாட்டுத் தலங்களான தாய் மூகாம்பிகை கோவில், கனகதுர்க்கை கோயில் என சென்று வழிபட்டு வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபினைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
