வைஃபை ஆன் செய்ததும், “எலேய்.. மாட்டுனது அவரு இல்லப்பா… அவருகிட்ட மாட்டுனதே நீதானப்பா”ன்னு வடிவேல் பேசுற வீடியோவை சவுண்டாக கேட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. யாரு யார்கிட்ட மாட்டி இருக்கிறது? ஏதோ பெரிய சம்பவமா இருக்கும் போல ப்ரோ?
ஆமாங்க ப்ரோ.. சொல்றேன் கேளுங்க.. முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மிசா சட்டத்தில கைது செஞ்சதை பத்தி சட்டசபையில களேபரமான விவாதம் நடந்துச்சே.. அதை கண்டிச்சு சென்னை சைதாப்பேட்டையில போன செப்டம்பர் 12-ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துச்சு.. அதுல பேசுன திமுக துணைப் பொதுச்செயலாளரான நீலகிரி எம்.பி. ஆ.ராசா, ”தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என ஒரு வரலாறு இருக்கிறது. முதலமைச்சராக கலைஞர் இருந்தாலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தாலும் ஆக்கப்பூர்வமான, முதிர்ச்சியான கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பார்கள். சிற்றரசு பேசும்போது மகா நடிகன் என்று சொன்னார்.
ஆனால் அவர் மகா நடிகர் இல்லை. தொட்டபெட்டா மலை மேல முட்டை பரோட்டா என பாடியவர் மகா நடிகனா?. சினிமாவின் மூலம் ஒரு நடிகனாக மக்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்? மக்களுக்கு நீ என்ன சொல்கிறாய் என்பதுதான் விஷயம். நீங்கள் மகா நடிகன் அல்ல. மகா அயோக்கியன். கொலஸ்ட்ரால் ரத்தத்தில் இருக்கலாம், மூளையில் இருக்கக்கூடாது… இப்போது ஒருவர் இதற்காகச் சிறைக்குப் போகவில்லை. அதற்காகப் போகவில்லை எனப் பேசுகிறார். எனக்குக்கூட நீ யாருக்காகப் பிறந்தாய் என்பதில் சந்தேகம் இருக்கிறது. நான் கேட்கலாமா? நீ என் தலைவனின் தியாகத்தைச் சந்தேகிக்கும் போது, நான் உன் பிறப்பைச் சந்தேகிக்கிறேன். வழக்குப் போட்டுக்கொள்”ன்னு ஆவேசமா பேசியிருந்தார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தவெக, விசிக, காங்கிரஸ் அமைச்சர்கள், பாமக அன்புமணின்னு பலரும் கண்டனம் தெரிவிச்சாங்க..
இதுக்கு பிறகு தன்னோட எக்ஸ் பக்கத்துல ஆ.ராசா, “தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ – ‘உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்.. என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத் தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்”-ன்னு பதிவிட்டிருந்தார்..
இந்தப் பேச்சு, போராட்டத்துக்காக ஆ.ராசா, கூட்டத்தை ஏற்பாடு செஞ்ச மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செஞ்சது சைதாப்பேட்டை போலீஸ்.
இந்த கேஸில்தான் ஆ. ராசாவுக்கும் மா. சுப்பிரமணியத்துக்கும் போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது. ரெண்டு பேரும் சம்மனை ஏற்று நேற்று சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில ஆஜரானாங்க..
முதல்ல மா. சுப்பிரமணியத்திடம் கேள்விகள் கேட்டு என்கொயரி நடத்தியது போலீஸ்.. அதுவரைக்கும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆ. ராசாவும் காத்திருந்தார்.
மா. சுப்பிரமணியத்திடம், “அந்தக் கூட்டத்திலே என்ன நடந்தது? அந்தக் கூட்டத்தை எப்படி ஏற்பாடு செஞ்சீங்க” என்றெல்லாம் கேட்டபொழுது, ‘நாங்கள் போலீஸ் அனுமதியை மீறி எல்லாம் கூட்டத்தை நடத்தலை.. போலீஸே எங்க கூட்டத்துக்கு பாதுகாப்பு கொடுத்துச்சே..”ன்னு ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிகிட்டே இருந்தார்.
அதுக்கப்புறம் ஆ.ராசாகிட்ட போலீசார் விசாரணையை ஆரம்பிச்சிருக்காங்க. ஆ.ராசாகிட்ட, ”உங்க பேரு என்ன? மனைவி பேரு என்ன? பிள்ளைங்க பேரு என்ன? அப்பா, அம்மா பேரு என்ன? குடும்பத்துல யாரெல்லாம் இருக்காங்க? சொந்த ஊர்ல எவ்வளவு நிலம் இருக்கு?”ன்னு குடும்ப விவரங்கள் தொடர்பாகவே ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டாங்க. மொத்தமா 70-க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆ.ராசாகிட்ட போலீசார் கேட்டாங்க.
இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த விசாரணையில போலீஸ் கிட்ட ஆ.ராசா திருப்பி பல கேள்விகளை கேட்டு திணறடிச்சதுதான்.
அதாவது, ”நான் மோசமா பேசினேன்னு சொல்றீங்களே, அப்படி என்ன பேசினேன்?” ன்னு ஆ.ராசா கேட்டார்.
அதுக்கு போலீசார், ”நீங்க அம்மாவை பத்தி மோசமா பேசியிருக்கீங்க”ன்னு சொன்னாங்க..
உடனே ஆ.ராசா, ”யாருடைய அம்மாவை பத்தி தப்பா பேசுனேன்”- அப்படின்னு கேட்டாரு.. அதுக்கு போலீசார்கிட்ட இருந்து தெளிவான பதில் வரலை.
அப்புறம் ஆ.ராசா, ”என்னுடைய பேச்சுல இன்னாருடைய அம்மாதான்னு யாரையாவது குறிப்பிட்டுப் பேசியிருக்கேனா? என்னோட X பேஜில இன்னாருடைய அம்மாவைப் பத்திப் பேசிட்டேன், அந்த வார்த்தைகளைத் வாபஸ் பெற்றுக்கிறேன்னு எங்கேயாவது சொல்லியிருக்கேனா? யாராவது என்னுடைய அம்மாவை இப்படிப் பேசிட்டாருன்னு என்மேல புகார் கொடுத்திருக்காங்களா? அப்படி புகார் வந்திருந்தா அந்த புகாரோட நகலை எனக்கு நீங்க கொடுக்கலையே ஏன்? சரி.. என் மேல எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கீங்களா? அப்படின்னா அந்த எஃப்.ஐ.ஆர். காபியும் எனக்கு தரலையே.. . முதல்ல நான் யாரைப் பத்தி தப்பா பேசினேன்னே நீங்க சொல்லாதபோது, எதை வச்சு என்கிட்ட இவ்வளவு கேள்விகளைக் கேட்கிறீங்க?” ன்னு அடுக்கடுக்கா ரிப்பீட் அடிச்சுட்டாரு..
இப்படி எல்லாம் அடுக்கடுக்காக ஆ.ராசா கேட்ட கேள்விகளுக்கு போலீஸ் கிட்ட பதில் வரலை.. ரொம்பவே திணறிப் போயிட்டாங்க.. அதோட என்ன செய்யறதுன்னு தெரியாம, “இருங்க சார்”ன்னு சொல்லிட்டு கமிஷனர் ஆபீஸுக்கு போன் போட்டு டிஸ்கஷன் செஞ்சாங்க..
கமிஷனர் ஆபீஸில் பேசுனதுக்கு அப்புறமா மறுபடியும் ஆ.ராசாகிட்ட போலீசார் புதுசா கேள்விகளை கேட்க ஆரம்பிச்சாங்க.. ஆனால் ஆ.ராசா திரும்பவும், ”என் மேல என்ன கேஸ்? யாரோட அம்மாவை பத்தி தப்பா பேசுன? என் மேல இருக்கிற கம்ப்ளெயின்ட் என்ன? அந்த காபி எங்கே? ஏன் எனக்கு கொடுக்கலை?”ன்னு கிடுக்குப்பிடி போட்டாரு..
என்ன சார் இதுன்னு மறுபடியும் கமிஷனர் ஆபீஸுக்கு போன் போட்டு சில விளக்கங்களை போலீசார் கேட்டுகிட்டாங்க.. இப்படிதான் நேத்து ஒன்றரை மணிநேரத்துக்கும் மேல சைதாபேட்டை ஸ்டேஷனல விசாரணை நடந்தது..
ஆனால் பாருங்க ப்ரோ.. கடைசி வரைக்கும் ஆ.ராசா கேட்ட ‘அந்த’ முக்கியமான எந்த கேள்விக்குமே போலீசார் தரப்பில தெளிவான பதிலே சொல்லலையாம்.. யாருடைய அம்மாவை ஆ.ராசா தப்பா பேசினாருன்னும் சொல்லலை.. அவர் மேல என்ன புகாருன்னும் சொல்லலை.. இப்ப இந்த விஷயத்தை அடுத்து எப்படி மூவ் செய்யுறதுன்னு போலீஸ் கமிஷனர் ஆபீஸில அதிகாரிகளும் வக்கீல்களும் சீரியஸ் டிஸ்கஷன் நடத்திகிட்டு இருக்காங்க ப்ரோ என டைப்செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.
