ஓமன் (Oman) கடற்பரப்பில் வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கதி என்ன என்பது தெரியவில்லை. இதனையடுத்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரை நேரில் வரவழைத்து மத்திய அரசு தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .
மேற்கு ஆசியாவின் போர்ச் சூழலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் ஈரானில் இருந்து வரும் கப்பல்களுக்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
இதன் காரணமாக அப்பகுதியில் வர்த்தகக் கப்பல்களுக்கான ஆபத்து அதிகரிக்கத் தொடங்கியது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகளை மீறி, ஈரான் துறைமுகத்துக்கு செல்ல முயன்றதாகக் கூறி கடந்த ஜூன் 8-ந் தேதி ‘எம்.டி மரைவெக்ஸ்’ (MT Marivex) என்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஓமன் வளைகுடாவில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் சிக்கிய கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 9-ந் தேதி 24 இந்திய மாலுமிகள் உட்பட மொத்தம் 28 பணியாளர்களுடன் சென்ற ‘எம்.டி செட்டபெல்லோ’ (MT Settebello) என்ற கெமிக்கல் மற்றும் எண்ணெய் வர்த்தகக் கப்பல் மீது ஓமன் கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை மீண்டும் கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

அமெரிக்காவின் தாக்குதலுக்குள்ளான செட்டபெல்லோ கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து ஓமன் கடற்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியது.
கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால், 3 இந்திய மாலுமிகள் கதி என்ன என்பது தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அமெரிக்கா விவகாரங்களுக்கான கூடுதல் செயலாளர் நாகராஜ் நாயுடு, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தற்காலிகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸை (Jason Meeks) நேரில் வரவழைத்து மத்திய அரசின் கடும் கண்டனம் தெரிவிக்கும் அறிக்கையை வழங்கினார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமன் கடற்கரைக்கு அப்பால் வர்த்தகக் கப்பலான செட்டபெல்லோ (Settebello) மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளில், இதுவரை 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 3 இந்தியர்கள் மாயமாகி உள்ளனர்.
ஓமனில் உள்ள எங்களது தூதரகம் இந்தச் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், தற்போது நடைபெற்று வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஓமன் அதிகாரிகளுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. பதற்றங்களை உடனடியாகக் குறைக்கவும், பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் திரும்புவதற்கு ஏதுவாக ராஜதந்திர தீர்வுக்கான தற்போதைய பேச்சுவார்த்தைகளை விரைந்து முடிக்கவும் மீண்டும் வலியுறுத்துகிறோம். இப்பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, இப்பகுதியில் உள்ள சர்வதேச நீர்வழிகள் மூலம் தடையில்லா மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் உடனடியாக மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
