ஈராக்கிற்கு சுமார் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை திங்கள்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்திய மதிப்பில் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.6,700 கோடியாகும். இந்த நடவடிக்கை ஈராக் தனது பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
பெல்-டெக்ஸ்ட்ரான் முக்கிய ஒப்பந்ததாரர்
இந்த ராணுவ விற்பனையில் அமெரிக்காவின் பெல்-டெக்ஸ்ட்ரான் நிறுவனம் முக்கிய ஒப்பந்ததாரராக செயல்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் நகரை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஈராக்கிற்கு தேவையான ஹெலிகாப்டர்கள் மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்க உள்ளது.
எந்த வகை ஹெலிகாப்டர்கள்?
இந்த முன்மொழியப்பட்ட விற்பனைத் தொகுப்பில் Bell 412EPX மற்றும் Bell 407M ரக ஹெலிகாப்டர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ஆயுத அமைப்புகள், ராக்கெட் லாஞ்சர்கள், மின்னணு-ஒளியியல் மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்கள், ஏவுகணை கண்டறியும் கருவிகள், ரேடியோ சாதனங்கள், உதிரிபாகங்கள் மற்றும் தரை ஆதரவு உபகரணங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து முதல் கண்காணிப்பு வரை
புதிய ஹெலிகாப்டர்கள் மூலம் ஈராக்கின் ராணுவப் போக்குவரத்து திறன் மட்டுமின்றி, கண்காணிப்பு மற்றும் வான்-தரை இலக்குகளைத் தாக்கும் திறனையும் மேம்படுத்த முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
விமானிகளைத் தயார்படுத்துவதற்கான பயிற்சி, பராமரிப்பு பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப, பொறியியல், தளவாட ஆதரவும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா–ஈராக் பாதுகாப்பு உறவில் முக்கிய நகர்வு
ஈராக்கின் தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரிப்பதுடன், அந்த நாட்டுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் இந்த ஒப்புதல் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்கா அளித்துள்ள இந்த ஒப்புதல் இறுதி விற்பனை ஒப்பந்தம் என்று பொருளல்ல. வெளிநாட்டு ராணுவ விற்பனை நடைமுறையில் இது அடுத்தகட்ட பரிசீலனைக்கான முக்கிய நடவடிக்கையாகும்.
