ரூ.22,000 கோடி… வங்கிகளின் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்துவேன் – சுபாஷ் சந்திரா

Published On:

| By Minnambalam Desk

எஸ்ஸல் குழும நிறுவனங்களின் கடன்களுக்கு தனிப்பட்ட உத்தரவாதம் அளித்த விவகாரத்தில் சிக்கியுள்ள ஜீ நிறுவனர் சுபாஷ் சந்திரா, கடன் வழங்கிய வங்கிகளுக்கு சேர வேண்டிய தொகை முழுமையாக செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தனது தனிநபர் திவால் நடவடிக்கையில் ரூ.22,000 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளுக்கு வெறும் ரூ.6.25 கோடி செலுத்தும் திட்டம் ஏற்கப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ADVERTISEMENT

ரூ.22,000 கோடி என்பது தனிப்பட்ட கடன் அல்ல

சுபாஷ் சந்திரா கூறுகையில், ரூ.22,000 கோடி என்பது தான் நேரடியாக பெற்ற கடன் அல்ல என்றும், பல்வேறு நிறுவனங்களுக்காக அளித்த தனிப்பட்ட உத்தரவாதங்களின் மொத்த மதிப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்திய வங்கித் துறையைச் சேர்ந்த கடன் வழங்குநர்களின் கோரிக்கை ரூ.5,311 கோடி என அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் ஏற்கெனவே ரூ.1,049 கோடி அளவிலான இரண்டு கணக்குகள் தீர்க்கப்பட்டுள்ளதால், தற்போது ரூ.4,262 கோடி கோரிக்கை நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடன் வாங்கிய நிறுவனங்களே செலுத்தும்

ADVERTISEMENT

தான் உத்தரவாதம் அளித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

வங்கிகளுடன் கணக்குகளை சரிபார்த்து, இறுதியாக செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்தத் தொகை முழுமையாக செலுத்தப்படும் என்றும், அனைத்து வங்கிகளிடமிருந்தும் ‘நோ டியூ’ சான்றிதழ் பெறுவதே நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அவர்கள் நிச்சயம் செலுத்துவார்கள். நான் அதை உறுதி செய்வேன்” என்று சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

கடனாளிகளை முதலில் அணுக வேண்டும்

பொதுவாக, கடன் வாங்கிய நிறுவனங்களிடம்தான் வங்கிகள் முதலில் வசூல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகே தனிப்பட்ட உத்தரவாததாரரிடம் செல்ல வேண்டும் என்பதே நடைமுறை என்று சுபாஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் தொடர்ந்த தனிநபர் திவால் நடவடிக்கையின் அடிப்படையிலேயே தனது வழக்கு தொடங்கியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அர்த்தமில்லை

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) ஏற்றுக்கொண்டுள்ள திருப்பிச் செலுத்தும் திட்டம், வங்கிகளின் கடன் வசூல் உரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதில்லை. கடன் வாங்கிய நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து தொகையை வசூலிக்க முடியும் என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, LIC Housing Finance, HDFC Bank உள்ளிட்ட சில கடன் வழங்குநர்கள் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share