அமெரிக்க எண்ணெய் கையிருப்பை நிரப்பும் வெனிசுலா கச்சா எண்ணெய்… டிரம்பின் அதிரடி திட்டம்!

Published On:

| By Kavi

அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பான Strategic Petroleum Reserve-ஐ (SPR) மீண்டும் நிரப்ப வெனிசுலா கச்சா எண்ணெயை பயன்படுத்தப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக குறைந்துள்ள அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பை உயர்த்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

“வெனிசுலா எண்ணெய் மூலம் கையிருப்பு நிரப்பப்படும்”

டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், வெனிசுலாவிடமிருந்து கிடைக்கும் எண்ணெயை அமெரிக்காவின் Strategic National Reserves-ல் சேமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

வெனிசுலா எண்ணெயை அமெரிக்க மக்களுக்கு கிடைத்த “பரிசு” என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். SPR என்பது உலகின் மிகப்பெரிய அவசரகால கச்சா எண்ணெய் கையிருப்பாகும். பெரிய அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் நேரங்களில் அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த கையிருப்பு

ADVERTISEMENT

ஆகஸ்ட் 21 நிலவரப்படி அமெரிக்க SPR-ல் சுமார் 290 மில்லியன் பேரல் எண்ணெய் மட்டுமே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பல தசாப்தங்களில் காணப்படாத குறைந்த அளவாகும். சமீபத்திய உலகளாவிய எரிசக்தி நெருக்கடிகளின்போது கையிருப்பிலிருந்து பெருமளவு எண்ணெய் எடுக்கப்பட்டது.

இதனால் கையிருப்பை மீண்டும் அதிகரிப்பது டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.

வெனிசுலாவுடன் புதிய எண்ணெய் ஒப்பந்தம்

வெனிசுலாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய ஒப்பந்தம் மூலம் அந்நாட்டின் 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 65 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் வளம் இருப்பதாக வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடு வரக்கூடும் என்றும், வெனிசுலா அரசுக்கு கணிசமான வரி வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு 55 சதவீத அளவிலான உற்பத்தி உரிமை கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக பலன் கிடைக்குமா?

வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க பெரிய அளவிலான முதலீடும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளும் தேவைப்படுகின்றன. எனவே, புதிய கச்சா எண்ணெய் அமெரிக்க கையிருப்பை உடனடியாக நிரப்பத் தொடங்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால் எதிர்காலத்தில் அமெரிக்க எரிபொருள் விலையிலும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அதன் பலன் எப்போது கிடைக்கும் என்பது அடுத்தகட்ட நடவடிக்கைகளையே பொறுத்திருக்கிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share