பி.எஃப் திட்டத்தில் சேர சம்பள வரம்பு ரூ25,000 ஆக உயர்வு- மோடி அரசின் ‘விஸ்வகர்மா ஜெயந்தி’ பரிசு!

Published On:

| By Mathi

Union Cabinet approves enhancement of EPFO

பி.எஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி (Employees’ Provident Fund Organisation (EPFO) திட்டத்தில் சேருவதற்கான சம்பள வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்துவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விஸ்வகர்மா ஜெயந்தி நாளை கொண்டாடப்படும் நிலையில் தொழிலாளர்களுக்கான பரிசாக மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியரின் மாத அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து ரூ.15 ஆயிரத்துக்குள் இருந்தால், அவரை EPFO திட்டத்தில் சேர்ப்பது கட்டாயமாக இருந்தது.

ADVERTISEMENT

புதிதாக வேலைக்குச் சேரும்போதே மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் இருந்தால், அவரை கட்டாயமாக PF திட்டத்தில் சேர்க்க வேண்டியதில்லை. ஊழியரும் நிறுவனமும் விருப்பப்பட்டால் மட்டும் சேர முடியும்.

இந்த ரூ.15,000 உச்சவரம்பு என்பது கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு 12 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் கட்டாய EPFO உறுப்பினர் சேர்க்கைக்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று செப்டம்பர் 16-ந் தேதி ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் மாதம் ரூ.15,001 முதல் ரூ.25,000 வரை ஊதியம் பெறும் புதிய ஊழியர்களும் கட்டாயமாக EPFO திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த மாற்றத்தின் மூலம் கூடுதலாக 51 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் EPFO பாதுகாப்புக்குள் வருவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொதுவாக ஊழியரின் PF கணக்கீட்டுக்குரிய ஊதியத்தில் 12 சதவிகிதம் ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும். அதே அளவிலான தொகையை நிறுவனமும் தனது பங்களிப்பாகச் செலுத்தும். பழைய ரூ.15 ஆயிரம் உச்சவரம்பின் அடிப்படையில் கணக்கிட்டால், ஊழியரின் அதிகபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ.1,800 ஆக இருந்தது. புதிய ரூ.25 ஆயிரம் உச்சவரம்பின் அடிப்படையில் முழுமையாகக் கணக்கிடப்பட்டால்: ஊழியரின் 12 சதவிகிதப் பங்களிப்பு – ரூ.3,000; நிறுவனத்தின் பங்களிப்பு – ரூ.3,000 மாதந்தோறும் மொத்தமாகச் சேரும் தொகை – ரூ.6,000 ஆகமாக உயரும். நிறுவனம் செலுத்தும் தொகையில் ஒரு பகுதி ஊழியரின் ஓய்வூதியத் திட்டமான EPS-க்கும், மீதமுள்ள தொகை EPF கணக்குக்கும் செல்லும். இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share