விசாரணைக்காக தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல்நிலையத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து வரப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக தஞ்சை தெற்கு காவல்நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 4) திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
தஞ்சையில் முதல்வரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

தஞ்சையில் திரண்ட திமுக தொண்டர்கள்- மிரண்ட போலீஸ்
தஞ்சையில் ஏராளமானோர் திரண்டு கூட்டம் அதிகமானதால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல்நிலையத்துக்கு உதயநிதியை அழைத்துச் செல்லாமல் பூதலூர் வட்டத்தில் உள்ள செங்கிப்பட்டி காவல்நிலையத்துக்கு யூ டர்ன் எடுத்து அழைத்து வந்துள்ளனர்.
இறங்க மறுத்த உதயநிதி
அங்கு முதலில் வாகனத்தில் இருந்து இறங்க உதயநிதி மறுத்துவிட்டார். எந்த காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோ, அந்த காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று போலீசாரிடம் கூறிய உதயநிதி, வாகனத்திலேயே அமர்ந்திருந்தார்.

செங்கிப்பட்டியில் விசாரணை
தொடர்ந்து போலீசார் அவரிடம் பேசிய நிலையில் தற்போது வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களை நோக்கி வந்து கையசைத்துவிட்டு விசாரணைக்காக காவல்நிலையத்துக்குள் சென்றுள்ளார்.
காலை முதல் உடன் வரும் திமுக மூத்த தலைவர்கள்
அவருடன் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு வருகை தந்துள்ளனர். உதயநிதி கைது செய்யப்பட்டது முதலே அவரது வாகனத்தை சென்னையில் இருந்து திமுக மூத்த தலைவர்கள் அனைவரும் பின் தொடர்ந்து செங்கிப்பட்டி வந்தனர்.

செங்கிப்பட்டியில் பதற்றம்
காவல் நிலையத்திற்குள்ளே உதயநிதி இருக்கும் நிலையில் வெளியே திமுக தொண்டர்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பி வருகின்றனர். செங்கிப்பட்டியில் மழை கொட்டி வரும் நிலையிலும் திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
