”காவல்துறை விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைக்க வேண்டும்” : நீதிபதி உத்தரவு!

Published On:

| By Kavi

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) சென்னையில் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

அவரை போலீசார் தற்போது தஞ்சாவூர் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர்.

போலீசார் கைது செய்ய வருவதற்கு முன்னதாகவே மூன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹசன் முகமது ஜின்னா, ஜெ ரவீந்திரன் ஆகியோர் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அப்போது முன்ஜாமின் மனு மீதான விசாரணை முடியும் வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிபதி இளந்திரையன் வாய்மொழியாக உத்தரவிட்ட போதும், உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இந்த சூழலில் முன் ஜாமின் கேட்ட வழக்கை மதிய உணவு இடைவெளிக்கு பிறகு நீதிபதி இளந்திரையன் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

அப்போது உதயநிதி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டதால் முன் ஜாமீன் மனு இனி ஏற்கத்தக்கதல்ல என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர். இளங்கோ, ஹசன் முகமது ஜின்னா, ஜெ.ரவீந்திரன், கே.எம்.டி முகிலன், அஸ்வின் பிரசன்னா, உதயகுமார் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

” இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரை அமைதியாக்குவதை நோக்கமாக கொண்டது. நாளை சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வருவதை தடுக்கும் நோக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் போட்டியின் காரணமாகவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது” என்று உதயநிதி சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

காவல்துறை சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக உதயநிதி ஸ்டாலினை காவல்துறை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று இருந்தாலும் விசாரணைக்கு பிறகு அவர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் தலைமை வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும் இன்றைக்குள் அவரை காவல் நிலைய பிணையில் விடுவிக்க வேண்டும். சம்மன் அனுப்பப்படும் போதெல்லாம் விசாரணைக்கு ஆஜராகி உதயநிதி ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share