டிவிஎஸ் குடும்பம்… சொத்துப் பிரிவினையில் தந்தை  – மகன் ஒரு பக்கம் ; தாய் – மகள் மறுபக்கம்!

Published On:

| By Kavi

டிவிஎஸ் குழுமத்தின் முக்கிய குடும்பமான வேணு ஸ்ரீனிவாசன் குடும்பத்தில் சொத்துப் பிரிவினை தொடர்பாகப் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

குடும்பத்திற்குள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தம் குறித்த முரண்பாடுகள், தற்போது சட்டப் போராட்டம் உருவாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

சொத்துப் பிரிவினையில் என்ன சிக்கல்?

வேணு ஸ்ரீனிவாசனும் அவரது மகன் சுதர்ஷன் வேணுவும் குடும்பச் சொத்துகள் ஏற்கெனவே பிரிக்கப்பட்டுவிட்டதாகக் கருதுகின்றனர். ஆனால், வேணு ஸ்ரீனிவாசனின் மனைவி மல்லிகா ஸ்ரீனிவாசனும் மகள் லட்சுமி வேணுவும் இதற்கு மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த 18 மாதங்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இரு தரப்பினரும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.1.83 லட்சம் கோடி மதிப்புள்ள டிவிஎஸ் மோட்டார்

ADVERTISEMENT

2024 மார்ச் 21-ம் தேதி குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்த விவகாரத்தின் மையமாக உள்ளது.

லட்சுமி வேணுவிடம் சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் பொறுப்பும், சுதர்ஷன் வேணுவிடம் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஆனால், நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் அவற்றின் சொத்துரிமையும் ஒன்றல்ல என்பதே லட்சுமி தரப்பின் முக்கிய வாதமாக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் டிவிஎஸ் மோட்டாரின் சந்தை மதிப்பு பெருமளவில் உயர்ந்துள்ளது.

அக்டோபர் 8-ம் தேதி வர்த்தக முடிவின்படி, டிவிஎஸ் மோட்டாரின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.83 லட்சம் கோடியாகவும், சுந்தரம் கிளேட்டனின் மதிப்பு சுமார் ரூ.24,000 கோடியாகவும் இருந்தது. இந்த மதிப்பு வேறுபாடும் சர்ச்சையின் முக்கிய பின்னணியாகப் பார்க்கப்படுகிறது.

2020 ஒப்பந்தமும் தற்போதைய சர்ச்சையும்

2020-ல் டிவிஎஸ் குழுமத்தின் நான்கு குடும்பப் பிரிவுகளுக்கு இடையே நிறுவனப் பங்குகளை மறுசீரமைக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 2024 ஒப்பந்தமும் சொத்துப் பிரிவினையின் ஒரு பகுதிதான் என்பது வேணு தரப்பினரின் நிலைப்பாடு.

ஆனால், அந்த ஒப்பந்தம் நிறுவனப் பெயரைப் பயன்படுத்துவது மற்றும் போட்டித் தொழிலில் ஈடுபடுவது தொடர்பான விதிகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்றும், குடும்பச் சொத்துகள் முழுமையாகப் பிரிக்கப்படவில்லை என்றும் லட்சுமி தரப்பினர் கூறுகின்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையே இந்த அடிப்படை விவகாரத்தில்தான் முரண்பாடு நீடிக்கிறது.

அடுத்தகட்டம் என்ன?

குடும்பத்திற்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்ந்தாலும், இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்லுமா என்பது அடுத்தகட்டத்தில் தெரியவரும்.

டிவிஎஸ் குழுமத்தின் எதிர்கால வாரிசுரிமை மற்றும் நிறுவனங்களின் உரிமைக் கட்டமைப்பு குறித்த விவாதங்களையும் இந்தச் சர்ச்சை முன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share