நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை… பின்னணி என்ன?

Published On:

| By Selvam

நெல்லையில் இன்று (மார்ச் 18) அதிகாலை ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகீர் உசேன் மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Tirunelveli retired SI murder

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி. இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் அவர்களின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் ஜாகீர் உசேன் பணியாற்றியுள்ளதாக தெரிகிறது.

இவர் தற்போது நெல்லை டவுனில் உள்ள முர்த்தின் ஜர்கான் தர்காவில் முத்தவல்லியாக இருந்து வருகிறார். தர்க்கா அருகே வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான 36 சென்ட் நிலம் தொடர்பாக இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பிரச்சனைகள் இருந்ததுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், ரமலான் நோன்பை ஒட்டி இன்று காலை ஜாகீர் உசேன் பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். தொழுகையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் டவுன் காட்சி மண்டபம் அருகே ஜாகீர் உசேன் வந்துகொண்டிருந்தபோது, நான்கு மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜாகீர் உசேன் பலியானார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் கீதா, கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருக்கிறார். மேலும், அந்த பகுதியில் குவிந்த ஜாகீர் உசேன் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜாகீர் உசேன் உடலை, உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Tirunelveli retired SI murder

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share