வருமான வரி ரீஃபண்ட் தாமதமாகிறதா?
வருமான வரித் தாக்கல் (ITR Filing) செய்து முடித்தவுடன் பலரும் தங்களுக்கு வர வேண்டிய ரீஃபண்ட் (Income Tax Refund) தொகை எப்போது வங்கிக் கணக்கில் சேரும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள்.
இருப்பினும், படிவத்தைச் சமர்ப்பித்த உடனேயே ரீஃபண்ட் பணம் கணக்கிற்கு வந்துவிடாது. நீங்கள் தாக்கல் செய்த ஐடிஆர் படிவத்தை வருமான வரித்துறை பரிசீலித்து (Processing) ஒப்புதல் அளித்த பின்னரே ரீஃபண்ட் தொகை விடுவிக்கப்படும்.
நீங்கள் தாக்கல் செய்த பிறகும் ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய 3 முக்கியமான நடைமுறைகளே காரணமாகும்.
1. இ-வெரிஃபிகேஷன் (e-Verification) கட்டாயம் செய்ய வேண்டும்
ஐடிஆர் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு அதை மின்னணு முறையில் சரிபார்ப்பது (e-Verification) மிகவும் அவசியமான முதற்படியாகும். படிவத்தைச் சமர்ப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-வெரிஃபிகேஷன் செய்யப்பட வேண்டும். ஆதார் ஓடிபி (Aadhaar OTP), நெட் பேங்கிங், டிஜிட்டல் கையொப்பம் (DSC) அல்லது ஏடிஎம் மூலம் இதனை நொடிகளில் செய்து முடித்துவிடலாம். குறித்த 30 நாட்களுக்குள் இ-வெரிஃபிகேஷன் செய்யத் தவறினால், நீங்கள் தாக்கல் செய்த ஐடிஆரே செல்லாததாகிவிடும் (Invalid Return). இதனால் ரீஃபண்ட் கிடைப்பதில் பெரும் சிக்கல் உருவாகும்.
வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்த்தல் (Pre-validate Bank Account)
உங்கள் ரீஃபண்ட் பணம் எந்த வங்கிக் கணக்கிற்கு வர வேண்டுமோ, அந்த கணக்கு வருமான வரி மின்-தாக்கல் (e-Filing) இணையதளத்தில் முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டு (Pre-validated) இருக்க வேண்டும். மேலும், அந்த வங்கிக் கணக்குடன் உங்கள் பான் (PAN) எண் மற்றும் மொபைல் எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தவறான கணக்கு எண், செல்லாத ஐஎஃப்எஸ்சி (IFSC) கோடு அல்லது பான் எண் இணைக்கப்படாத வங்கிக் கணக்கு இருந்தால், ரீஃபண்ட் தொகை வங்கியால் நிராகரிக்கப்பட்டு ‘Refund Failure’ ஆகிவிடும்.
படிவம் 26AS மற்றும் AIS உடன் எண்களை ஒப்பிட்டுச் சரிபார்த்தல்
நீங்கள் தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கில் உள்ள டிடிஎஸ் (TDS) விவரங்கள் மற்றும் வருமானக் கணக்குகள், வருமான வரித் துறையின் ஃபார்ம் 26AS மற்றும் ஆண்டு தகவல் அறிக்கை (AIS – Annual Information Statement) ஆகியவற்றில் உள்ள விவரங்களுடன் கச்சிதமாகப் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். இரண்டிற்கும் இடையே ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வருமான வரித்துறையின் ஆபத்து மேலாண்மை அமைப்பு (Risk Management System) உங்கள் ரீஃபண்டைப் தற்காலிகமாகப் நிறுத்தி வைக்கும். ஏதேனும் தவறு இருப்பதை அறிந்தால், உடனடியாக திருத்தப்பட்ட அறிக்கை (Revised Return) தாக்கல் செய்வது நல்லது.
