”தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தில், 5 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்; இதர 12 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது; இந்தச் சம்பவம் தொடர்பாக 9 சிறைத்துறை பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று சிறைத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தேனி மாவட்டம் தேக்கம்பட்டியில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் மாவட்டச் சிறை செயல்பட்டு வருகிறது. இந்தச் சிறையில் 200 கைதிகளை அடைத்து வைக்க அனுமதி உள்ளது. ஆனால், அக்டோபர் 26-ந் தேதி மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
வலிப்பு வந்ததாகக் கூறி நாடகம்
அக்டோபர் 26-ந் தேதி இரவு சுமார் 10 மணியளவில், சிறையின் 3-வது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி சில கைதிகள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து, அந்த பிளாக்கில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் ஸ்டாலின் பிரபு (காவலர் எண் 15), கைதியின் உடல்நிலையைப் பார்ப்பதற்காக உள்ளே சென்றார். அப்போது அவரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கைதிகள், சிறையிலிருந்து தப்பிக்க முயன்றனர்.
பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், காவலர்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கைதிகள், சாவிகளைப் பறித்து, சிறையின் பிரதான நுழைவாயிலைத் திறந்து தப்பிச் சென்றனர்.
தப்பிய 17 கைதிகள் யார்?
சிறையில் இருந்து தப்பியவர்கள் லிங்கபிரசாத், சோலை முகிலேஸ்வரன், ராஜா சிக்கந்தர், மீனாட்சி சுந்தரம், சிலம்பரசன், கருப்பசாமி, சபரிநாதன், பொன்முத்துசெல்வம், நிஷாந்த், பிரவீன்குமார், முத்துவேலங்கோவன், ரெஜின், தருண்குமார், திருப்பதி, ராஜ்குமார், பாண்டிசெல்வம், கார்த்திக்ராஜா ஆகிய 17 பேர் ஆவர்.
இவர்களில் பிரவீன்குமார், சிலம்பரசன், ராஜா சிக்கந்தர், ராஜ்குமார், லிங்கபிரசாத் ஆகிய 5 பேர் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கண்டமனூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 324/2026-ன் கீழ், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 121(1), 296(b), 115(2), 118(1), 309(4), 109, 262 மற்றும் 353/3 ஆகிய 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 சிறைத்துறை பணியாளர்கள் இடைநீக்கம்
இந்தச் சம்பவத்தில் கடமை தவறியதற்காக தேனி மாவட்டச் சிறையைச் சேர்ந்த 9 சிறைத்துறை பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து,
- சிறைத்துறை டிஜிபி டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ்
- சிறைத்துறை ஐஜி ஆர்.கனகராஜ்
- மதுரை சரக சிறைத்துறை டிஐஜி டாக்டர் ஏ.முருகேசன்
- மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ்
- தென்மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிதாரி ஐ.பி.எஸ்.
- மதுரை சரக காவல்துறை டிஐஜி டாக்டர் அபினவ்குமார் ஐ.பி.எஸ்.
- தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் கவுதம் ஐ.பி.எஸ். ஆகியோர் தேனி மாவட்ட சிறைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இவ்வாறு சிறைத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
