டாஸ்மாக்: எச்சரித்த நீதிமன்றம் – களமிறங்கிய நீலகிரி மாவட்ட நிர்வாகம்!

Published On:

| By admin

நீலகிரி மாவட்டத்தில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்த நிலையில், காலி மது பாட்டில்களைச் சேகரிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது.
வனவிலங்குகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், கண்ணாடி பாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
மேலும், கண்ணாடி பாட்டில்கள் விற்கப்படும்போது அவற்றை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை மற்றும் அதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் திட்டத்தை தாக்கல் செய்யும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
அந்தத் திட்டத்தில் திருப்தி அடைந்தால் தொடர்ந்து மலைவாசஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதி அளிப்பதாகவும், இல்லாவிட்டால் மலைவாசஸ்தலங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்த நீதிபதிகள், இவ்வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்க 15 மையங்களை அமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியிருக்கிறது.
இந்த தொடர்பாக பேசியுள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், “மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் காலி மது பாட்டில்கள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ஊட்டி தலைக்குந்தாவில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதற்கான பணியாளர்களை நியமித்து சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும், நீர்நிலைகள், நெடுஞ்சாலைகள், வனங்களில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இந்த மையங்களில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிக் கழிவுகளை வழங்கலாம். மொத்தமாக சேகரித்து தேவைப்படுவோருக்கு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசியுள்ள நீலகிரி வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், ”காலி மதுபாட்டில்களை, டாஸ்மாக் கடைகளே திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், காலி மது பாட்டில்களுக்கு சிறிய தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு, மாவட்ட நிர்வாகம் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலமாகவும் காலி மதுபாட்டில்களை நீர்நிலைகள், வனப்பகுதிகளில் வீசிச் செல்வது தடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்.

**-ராஜ்-**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share