வைஃபை ஆன் செய்ததும், “நாற்காலிக்கு சண்டை போடும் நாடு நம் பாரத நாடு” பாடலை பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ஏதோ தொகுதிக்கான சண்டை மாதிரி இருக்கு?
அப்படியா.. அது டிவியில ஓடுற பாட்டுய்யா.. நாம சங்கதிக்கு வருவோம்.. பாஜகவும் காங்கிரஸும்தான் இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்காம இருக்காங்க..
டிசம்பர் மாசமே பேச்சுவார்த்தை குழு அமைச்சு, ”நாங்க எல்லாம் எப்பவோ எலக்ஷனுக்கு ரெடி… திமுகதான் டிலே பண்ணுது”ன்னு ஓவரா பேசுன காங்கிரஸ்தான் நாமினேஷன் ஆரம்பிச்சும் வேட்பாளர்களை அறிவிக்க முடியாம திண்டாடுது…
எல்லா கட்சியில இருக்கிறதுதானே.. ஆமா முதல் கட்டமா சில வேட்பாளர்களையாவது காங்கிரஸ் அறிவிச்சிருக்கலாமே?
அங்கேயும்தான்யா சிக்கல்.. காங்கிரஸ் கட்சியில எந்த தொகுதியை தொட்டாலும 3,4 பேருக்கு சீட் கொடுத்தாகனும்னு ஒரே அக்கப்போராம்… டெல்லியில ஒரு வாரமா இதே பஞ்சாயத்துதான்..
இதை பத்தி டெல்லியில விசாரிச்சப்ப, “ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சீனியர், ஒரு எம்.பி, ஒரு மாஜி தலைவர் இல்லைன்னா டெல்லி லீடர் லாபி பண்றாங்க.. அதனால யார் வேட்பாளருன்னே முடிவெடுக்க முடியாம இருக்காங்க..
உதாரணமா, நாங்குநேரி தொகுதியில சிட்டிங் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன்.. அவர் தனக்கு அந்த தொகுதியே வேண்டாம்.. விளவங்கோடு கொடுங்கன்னு கேட்கிறாரு…

ஆனால் விளவங்கோடு சிட்டிங் எம்.எல்.ஏ, தாரகை கட் பட், “அப்படியெல்லாம் தொகுதியை விட்டுத் தர முடியாது.. அப்படி தொகுதி மாறித்தான் ஆகனும்னா எனக்கு குளச்சல் தொகுதியை கொடுங்க..நிற்கிறேன்”ன்னு சொல்றாங்களாம்..
இந்த களேபரத்துக்கு நடுவ விளவங்கோடு தொகுதிக்கு மலையாளி வேட்பாளர் ஒருத்தரை ரெடியா கையில வெச்சுகிட்டு இருக்கிறாராம் கேசி வேணுகோபால்..
இதே மாதிரி மேலூர் தொகுதியில கார்த்தி சிதம்பரம் ஒருத்தரை சொல்றாரு.. மாணிக்கம் தாகூர் நான் சொல்றவருக்குதான் சீட் கொடுக்கனும்னு அடம் பிடிக்கிறாரு.. இப்படி எல்லா தொகுதியிலேயும் மல்லுக்கட்டா இருக்கிறதால இழுபறியா இருக்குது” என்கின்றனர்.

பாமக ஜிகே மணி மகன் தமிழ்க்குமரன் காங்கிரஸுக்கு போனாரே.. சீட் கன்பார்மாகிடுச்சா?
அதுவா.. பென்னாகரத்துக்காக பெரிய சம்பவம் எல்லாம் நடந்துகிட்டு.. இதை பத்தி தமிழ்க்குமரனுக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “காங்கிரஸில பாமகவின் சேலம் அருள் எம்.எல்.ஏ.வும் தமிழ்க்குமரனும் சேருவதாக முடிவு எடுத்தாங்க.. இவங்க ரெண்டு பேருடைய பயோ டேட்டாவையும் ராகுல் காந்திக்கு செல்வப்பெருந்தகைதான் வாங்கி டெல்லிக்கு அனுப்பி வெச்சாரு..
ரெண்டு பேருமே எலக்ஷன்ல சீட் கொடுத்தா கட்சியில சேருவோம்னும் சொல்லி இருந்தாங்க.. ராகுல் காந்தியோட எலக்ஷன் டீம் இதை பார்த்துட்டு ராகுல் காந்திக்கு அனுப்பினாங்க.. ராகுலும் தமிழ்க் குமரனுக்கு மட்டும் ஓகே சொன்னாரு.. அதனால அவரு டெல்லி போய் காங்கிரஸில சேர்ந்துட்டாரு..
இப்ப பென்னாகரம் தொகுதியில தமிழ்க்குமரனை வேட்பாளரா போடனும்னு சொல்லும் போது ராகுல் காந்தி பேக் அடிச்சுட்டாரு.. ”நேத்து கட்சிக்கு வந்தவருக்கு உடனே சீட் கொடுக்கனுமா?”ன்னு சொல்றாராம்.. இத்தனைக்கும் அவருதானே ஓகே சொன்னவர்.. இப்ப என்னவோ ஜகா வாங்குகிறாரு.. இருந்தாலும் எப்படியும் சீட் வாங்கிடுவோம்”னு நம்பிக்கையா சொல்றாங்க..

அதோட, காங்கிரஸில வேட்பாளர்களை தேர்வு செய்யுற குழுவின் மீட்டிங்கும் நடக்கலை.. தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில இருக்கிறாரு.. கூப்பிட்டா டெல்லிக்கு போலாம்னு இருக்காரு.. சீட் கனவுல இருக்கிற பலரும் டெல்லியில டேரா போட்டு போராடிகிட்டு இருக்காங்க.. எப்படியும் நாமினேஷன் முடியுற ஏப்ரல் 6-ந் தேதிக்கு முதல் நாளாவது பட்டியல் ரிலீஸ் ஆகிடும்னு சொல்றாங்கய்யா
ஓஹோ.. வைகோ திடீர்னு தனிச் சின்னத்துல போட்டியில்லைன்னு சொல்லிட்டாரே?
ஆமாய்யா.. சிஎம் ஸ்டாலினும் வைகோவோட பெருந்தன்மையை பாராட்டி இருக்காரு…
திமுக வேட்பாளர்களை அறிவிச்ச உடனே மார்ச் 29-ந் தேதி நம்ம டிஜிட்டல் திண்ணையில, “சிஎம் மனைவி துர்கா ஸ்டாலின் பிறந்த ஊரான திருவெண்காடு, சீர்காழி தொகுதியிலதான் வருது… இங்க சிட்டிங் எம்.எல்.ஏ.வான பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சீட் கொடுக்க துர்கா ஸ்டாலின் பரிந்துரைச்சாங்க..ஆனா கடைசி நேரத்துல மதிமுகவுக்கு அந்த தொகுதியை கொடுக்க வேண்டியதாச்சு..”ன்னு சொல்லி இருந்தோம் இல்லையா?
அந்த சீர்காழி தொகுதியிலதான் மதிமுக தனிச்சின்னத்துல நிக்காம இப்ப ‘உதயசூரியன் ‘ சின்னத்துலேயே நிக்கிறோம்னு வைகோ சொல்லி இருக்காரு…
என்னதான் நடந்துச்சுன்னு ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “சீர்காழி தொகுதியில திமுக நிக்கலைங்கிறதுல துர்கா ஸ்டாலினுக்கு ரொம்பவே வருத்தம்.. சொந்த தொகுதியில நம்ம கட்சி வேட்பாளர் நிக்கனும்னு விரும்பினாங்க.. ஆனா அந்த தொகுதி மதிமுகவுக்கு போயிருச்சு..
ஆனாலும், மத்த தொகுதியில எல்லாம் உதயசூரியன்ல மதிமுக வேட்பாளர்கள் நிற்கிறாங்க.. எங்க தொகுதியில திமுக வேட்பாளர்தான் நிக்கலை.. அட்லீஸ்ட் உதயசூரியன் சின்னத்துலயாவது போட்டி போட சொல்லுங்கன்னு ஸ்டாலின்கிட்ட சண்டை போட்டுட்டாங்க துர்கா அம்மையார்..
இதுக்கு அப்புறமா, வைகோவை இன்னைக்கு காலையில் டிஆர் பாலு சந்திச்சு பேசினாரு.. “தேர்தல் ஆணையத்துக்காக லோக்சபா எலக்ஷன்ல தனிச்சின்னத்துல நின்னுட்டீங்க.. இப்ப இந்த ஒரு தொகுதிதானே.. உதயசூரியன்ல நின்னுங்க”ன்னு கன்வீன்ஸ் பண்ணினாரு பாலு..ரொம்பவே தயங்குன வைகோ ஒருவழியா ஓகே சொல்லி இந்த அறிவிப்பை வெளியிட்டாரு” என்றனர்.

பாஜகவுல அண்ணாமலை பஞ்சாயத்து என்னய்யா?
காங்கிரஸ் மாதிரிதான் பாஜக வேட்பாளர் பட்டியலும் இன்னைக்கு வரும்.. நாளைக்கு வரும்னு வெயிட்டிங்..
இதை பத்தி விசாரிச்சப்ப, ”கோவையில வானதி சீனிவாசன் மட்டும் போட்டியிடுற மாதிரி கோவை வடக்கு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கு. இதனால அண்ணாமலையின் ஆதரவாளர்கள், “அண்ணே நம்ம கட்சிக்கு கொடுத்திருக்கிற மொடக்குறிச்சி தொகுதி நல்லா இருக்கும்ணே.. நமக்கு நல்ல பேஸ் இருக்குண்ணே.. அங்கே நாம நிக்கலாம்னு” சொல்லிட்டு இருக்காங்க..

ஆனா அண்ணாமலையோ, “2024 லோக்சபா எலக்ஷன்ல கோவையில நின்னப்ப திமுகவும் அதிமுகவும் சேர்ந்து பல கோடி ரூபாய் செலவு செஞ்சு என்னை தோற்கடிச்சாங்க.. அதே மாதிரிதான் இப்பவும் எலக்ஷன்ல எந்த தொகுதியில நின்னாலும் இதே வேலையைத்தான் ரெண்டு கட்சிகளும் சேர்ந்தே செய்வாங்க… மாநில தலைவராக இருந்தப்பவே அப்படி செஞ்சாங்க.. இப்ப கட்சியில பதவி இல்லாத நேரத்துல எலக்ஷன்ல தோத்துட்டா எதிர்காலமே ரொம்ப கேள்விக்குறியாகிடுமேன்னு எலக்ஷன்ல போட்டி போடவே தயங்குறாரு அண்ணாமலை…”ன்னு சொல்றாங்கய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.
