தமிழறிஞர் முனைவர் அருகோ காலமானார்

Published On:

| By Pandeeswari Gurusamy

மூத்த தமிழ் ஆய்வாளர் முனைவர் அரு கோபாலன் இன்று (டிசம்பர் 23) உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகப் புகழப்பட்டவர் அரு கோபாலன். மாத இதழாக வெளியான எழுகதிர் இதழின் ஆசிரியராகவும் இருந்து வந்தார். தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் தமிழர் நலனுக்காக பணியாற்றி வந்த இவர் திராவிட இயக்கத்தின் சில சித்தாந்தங்களை விமர்சித்தும் வந்தார்.

ADVERTISEMENT

முனைவர் அருகோ உடல் நலம் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

சி.பா. ஆதித்தனார் இவருக்கு அருகோ என பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

முனைவர் அருகோ மறைவைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,”தமிழ்நாட்டின் மிக மூத்த தமிழறிஞர்களில் ஒருவரும், தமிழர் நலனுக்காகவே கடைசி மூச்சு வரை பாடுபட்டவருமான அருகோ என்றழைக்கப்படும் அரு.கோபாலன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலில் எளிய குடும்பத்தில் பிறந்த அருகோ அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் தேசியத்திற்காகவும், தமிழர் நலனுக்காகவும் பாடுபட்டவர். 1958-ஆம் ஆண்டில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்ததனார் அவர்கள் நாம் தமிழர் கட்சியைத் தொடங்கிய போது ஆதித்தனாருடன் இணைந்து பணியாற்றியவர். அந்த இயக்கத்திற்காக ஆதித்தனார் தொடங்கிய தமிழ்க்கொடி என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றியவர். அதன்பின் எழுகதிர் என்ற இதழைத் தொடங்கி தமது இறுதி மூச்சு வரை நடத்தியவர்.

ADVERTISEMENT

ஈழத்தமிழர் விடுதலை இயக்கங்களுடன் நெருக்கமான உறவு கொண்ட அருகோ, அதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியவர். தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் ஏராளமான போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர்.

பெரியவர் அருகோ அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், தமிழ்தேசியவாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share