தமிழகத்துக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை : மோடி 

Published On:

| By Kavi

தமிழ்நாட்டுக்கு இரட்டை இன்ஜின் அரசு தேவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் இன்று (ஜனவரி 23) நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். 

ADVERTISEMENT

அவர் கூறுகையில்,  “தமிழ்நாடுதான் பாரதநாட்டின் பண்பாட்டை வளம் நிறைந்ததாக ஆக்கியது. சங்க கால இலக்கியங்கள், விஞ்ஞானம், ஆலயங்கள், தொழில்நுட்பம், பாரத நாட்டின் கவுரவத்தை உயர்த்தியது.  வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி  நாடு முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டை  திமுகவின் கொடூரமான கைகளில் இருந்து விடுவித்தாக வேண்டும். 

எந்தளவுக்கு வேகமாக தமிழ்நாடு முன்னேறுகிறதோ அந்தளவுக்கு வேகமாக தேசமும் முன்னேற்றம் அடையும். 

ADVERTISEMENT

கடந்த 11 ஆண்டுகளில் என்.டி.ஏ அரசாங்கம் தமிழ்நாட்டின் வளர்சிக்காக  வரலாறு காணாத பணிகளை செய்திருக்கிறது. 2014க்கு முன் டெல்லியில் திமுக – காங்கிரஸ் அரசாங்கம்  இருந்த வேளையில் அப்போது தமிழ்நாட்டின்  வளர்ச்சிக்காக மிக குறைந்த நிதியினை ஒதுக்கியது.  ஆனால் கடந்த என்.டி.ஏ ஆட்சியில் அதிகார பகிர்வு வாயிலாக மட்டும் 3 லட்சம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது. 

காங்கிரஸ் திமுக மத்தியில் ஆட்சி செய்த காலத்தோடு ஒப்பிடுகையில் இது, மூன்று மடங்கு அதிகமானது. கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கியிருக்கிறது. 

ADVERTISEMENT

ஆனால்  காங்கிரஸ் திமுக ஆட்சியில், எஸ்சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கு நல்லது செய்கிறோம் என்று கூறி மோசடிதான் செய்தனர். 

இப்போது ரயில் பட்ஜெட் குறித்து ஒரு எடுத்துக்காட்டை சொல்ல விரும்புகிறேன்.  ரயில் பட்ஜெட் என்ற பெயரில் திமுக  காங்கிரஸ் அரசு கொடுத்ததை விட 7 மடங்கு கூடுதல் நிதியை என்.டி.ஏ.வுக்கு கொடுத்திருக்கிறது.  தற்போது 80 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களை என்.டி.ஏ அரசாங்கம்தான் இயக்கியிருக்கிறது. 

தமிழ்நாட்டின் முக்கிய பலமே விவசாயிகள் தான். அவர்களுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததுள்ளது. பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் தேசத்தின் விவசாயிகளுக்கு ரூ.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதுத்தவிர நமது மீனவர்களின் நலன் கருதி என்.டி.ஏ அரசாங்கம் பிரதம மந்திரி மீன் வள திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி ஆழ் கடலுக்குள் செல்லும் மீன்பிடி படகுகள் வழங்கப்பட்டு வருகிறது.  50 ஆயிரம் விவசாய கடன் அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசினார். 

திமுக அரசாங்கம் நமது இளைஞர்களை போதைப்பொருள் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டார்கள் என்று கூறிய பிரதமர் மோடி,   ‘போதைப் பொருள் கும்பலுடன் திமுக அரசுக்கு தொடர்பு உள்ளது. வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நிச்சயம் தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாறும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை இன்ஜின் ஆட்சி தேவை.  ஜெயலலிதா ஆட்சியில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, ஆட்சி அதிகாரம் சிறப்பாக இருந்தது. அதுபோன்று தற்போது தமிழ்நாட்டின் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப் பொருட்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்கவும் இந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்” என்றார். 

மேலும் அவர்,  “ நாங்கள் தமிழ் கலாச்சாரம் பற்றி வாய் பந்தல் போடுபவர்கள் அல்ல. தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு  விளக்கு போடுவதை கூட  விவாதப் பொருளாக உருவாக்கியுள்ளார்கள். அப்போது நம் தலைவர்கள் பக்தர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்கள்.  

ஆனால், திமுகவும் அவர்களது கூட்டணியினரும் தங்களது வாக்கு வங்கியை பாதுகாக்க நீதிமன்றத்தை கூட விட்டுவைக்கவில்லை. அவமானப்படுத்தினார்கள்.  தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் எதிரி திமுக. 

இதே போலதான் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட திமுக-காங்கிரஸ் கட்சிகள் முக்கிய காரணமாக இருந்தன. அதை பாஜக அரசு சட்டம் மூலம் உடைத்து தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை மீட்டு கொடுத்தோம். அதை போலவே திமுக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை விரைவில் மீட்போம்” என்று கூறினார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share