‘பராசக்தி’ படத்துக்கு சம்பள பாக்கி: ‘இதயம் முரளி’ ரிலீஸுக்குத் தடைப் போட்ட சுதா கொங்கரா!

Published On:

| By Santhosh Raj Saravanan

sudha kongara files case to stop release of idhayam murali heres why

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பராசக்தி’ திரைப்படத்தை இயக்கியதற்காகத் தனக்குச் சேர வேண்டிய மீதமுள்ள பல கோடி ரூபாய் சம்பளத் தொகையை வழங்கக் கோரியும், அதே தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படமான அதர்வாவின் ‘இதயம் முரளி’ வெளியீட்டுக்குத் தடை கோரியும் முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 8.39 கோடி சம்பளப் பாக்கி

டான் பிக்சர்ஸ் (Dawn Pictures) பேனரில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘பராசக்தி’. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்ததாகத் தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை இயக்குவதற்காகப் பேசப்பட்ட மொத்த சம்பளத் தொகையான 15 கோடி ரூபாயில் (ஜிஎஸ்டி சேர்த்து ரூ. 17.70 கோடி), இதுவரை ரூ. 9.31 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ. 8.39 கோடியைத் தயாரிப்பு நிறுவனம் இன்னும் வழங்கவில்லை என்றும் இயக்குநர் சுதா கொங்கரா குற்றம் சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT
‘இதயம் முரளி’ பட வெளியீட்டுக்குச் சிக்கல்

நிலுவையில் உள்ள தனது சம்பளத் தொகையைப் பெற்றுத் தரக் கோரி, சுதா கொங்கரா மற்றும் அவரது நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், தனக்குச் சேர வேண்டிய தொகையைக் கொடுக்காமல், அதே டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படமான ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படத்தின் திரையரங்க மற்றும் ஓடிடி (OTT) வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். அதர்வா, ஃபஹத் பாசில், கயாடு லோஹர் நடிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள ‘இதயம் முரளி’ (Idhayam Murali) திரைப்படம் வரும் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது படக்குழுவினருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இந்த வழக்கு நேற்று நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சுதா கொங்கரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘பராசக்தி’ படத்தின் முழு அறிவுசார் சொத்துரிமையும் (Intellectual Property Rights) ஒப்பந்தப்படி தயாரிப்பாளருக்கு மாற்றப்பட்டு, ஓடிடியிலும் படம் வெளியாகிவிட்ட நிலையில், இயக்குநருக்கான சம்பள பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘பராசக்தி’ திரைப்படத்தை ஜூலை 8-ஆம் தேதி வரை சாட்டிலைட் டிவிக்களில் (Satellite Television) ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
அடுத்த கட்ட விசாரணை

மேலும், ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் வெளியீட்டுக்குத் தடை கோரியுள்ள சுதா கொங்கராவின் மனு தொடர்பாக, டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஜூலை 7-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜூலை 10-ஆம் தேதி ‘இதயம் முரளி’ வெளியாகவுள்ள நிலையில், ஜூலை 8-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த கட்ட வழக்கின் விசாரணையின் முடிவைப் பொறுத்தே அப்படத்தின் ரிலீஸ் உறுதியாகும் எனத் தெரிகிறது.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share