கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயில் மலைப்பகுதியில், மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம், பீடம்நேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் முகேஷ் குமார் (23), இவர் கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் Pharm-D ஐந்தாம் ஆண்டு பயின்று வந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கி கல்வி பயின்று வந்தார். முகேஷ் குமார் நேற்று இரவு தனது நண்பர்களுடன் வெள்ளிங்கிரி மலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்.
நேற்று இரவு சுமார் 10.00 மணி அளவில், முகேஷ் குமார், அபி மற்றும் மகேந்திரன் உள்ளிட்ட எட்டு நண்பர்களுடன் மலையேறத் தொடங்கினார். இந்நிலையில் இன்று அதிகாலை 2மணி அளவில் ஐந்தாவது மலைப் பகுதியை எட்டிய போது முகேஷ் குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதில் கண் இமைக்கும் நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அவருடைய நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடி மருத்துவ உதவி கிடைக்காத சூழலில், அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கோயில் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர், டோலி தூக்கும் தொழிலாளர்களின் உதவியுடன் உயிரிழந்த முகேஷ் குமாரின் உடலை மீட்டு, மலைப் பாதையில் இருந்து கீழே கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்தச் சம்பவம் மலையேற்றப் பிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
