கல்வி – வேலைவாய்ப்பு நெருக்கடிகள் : ஆழமாகும் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்வது எப்படி?

Published On:

| By Minnambalam Desk

Indias Education and Employment Crises

சந்தோஷ் மெஹ்ரோத்ரா

மொழிபெயர்ப்பு: அரவிந்தன்

புதிய வேலைவாய்ப்புகள் குறைந்துவரும் நேரத்தில் இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கம் நிகழ்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் சமூக ஏற்றத்தாழ்வை அதிகரிக்கின்றன. இதற்கு என்ன தீர்வு?

ADVERTISEMENT

பல தசாப்தங்களாக, இந்தியா தனது தனிநபர் வருமான அளவிற்கு இணையான மனிதவள மேம்பாட்டை எட்டுவதில் பின்தங்கியே உள்ளது. இது கொள்கை முடிவுகளின் விளைவாகும். தற்போது, 2040ஆம் ஆண்டுடன் இந்தியாவின் ‘மக்கள்தொகை சாதகக் காலம்’ (Demographic dividend) முடிவுக்கு வரவுள்ள நிலையில், நாடு ஒரு பன்முக நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. வேலைவாய்ப்பு நெருக்கடி, பொருளாதாரத்தின் கட்டமைப்புக் குறைபாடு (தேவை குறைந்து வருதல்), கல்வி முறை சார்ந்த சிக்கல் என இவை யாவும் மனிதவள மேம்பாட்டுப் பற்றாக்குறையையே பிரதிபலிக்கின்றன.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ‘வளங்குன்றா வேலைவாய்ப்பு மையம்’ (Centre for Sustainable Employment), 2018 முதல் இந்தியத் தொழிலாளர்களின் நிலை குறித்த சிறந்த அறிக்கைகளை (SWI) வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டு அவர்கள் வெளியிட்டுள்ள “தொழிலாளர் சந்தையில் இளைஞர்கள்: கற்றலிலிருந்து ஈட்டுதலுக்கு மாறுவதற்கான பாதைகள்” (The Youth in the Labour Market: Pathways from Learning to Earning) என்ற அறிக்கை, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தோடு, இதுவரை ஆராயப்படாத பல புதிய பரிமாணங்களையும் சுட்டிக்காட்டுகிறது.

ADVERTISEMENT
தரமான கல்வி

முதலாவதாக, இந்தியாவில் தரமான கல்வி பரவலாகக் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதம் உலகளாவிய தரத்திற்கு இணையாக இருந்தாலும், கல்வியின் தரம் பெரும் சவாலாக உள்ளது. உயர்தரக் கல்வி நிறுவனங்கள் ஒரு சில மாநிலங்களில் — குறிப்பாகத் தென்னிந்தியாவில் — சிறப்பாக உள்ள நிலையில், தரமான உயர்கல்வியைப் பெறுவதில் பிராந்திய ரீதியான ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன.

வேலைவாய்ப்பு

உயர்கல்விக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு என்பது மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகளைச் சார்ந்துள்ளது. இந்தியாவில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் சமூக அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெறுகின்றனர்; இது சீனாவோடு ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்டது. வட மாநிலங்களில் இத்தகைய பட்டதாரிகள் அதிகம் உள்ளனர். அங்குள்ள பொதுவான பட்டப்படிப்புகள் (BA போன்றவை) பெரும்பாலும் ஆழமற்றவையாகவும், அரசுப் பணித் தேர்வுகளுக்கான தயாரிப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டவையாகவும் உள்ளன. இதன் விளைவாக, பட்டதாரிகளிடம் ஆராய்ச்சித் திறன், தொழில்நுட்பம் அல்லது தொழிற்கல்வி சார்ந்த திறன்கள் குறைந்து காணப்படுகின்றன.

ADVERTISEMENT

எனது முந்தைய ஆய்வுகளில் நான் சுட்டிக்காட்டியபடி, இதன் நேரடி விளைவாகப் பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய பாடங்களுக்குத் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. இது அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களும் இப்பாடங்களைத் தவிர்க்கும்  நிலையை உருவாக்குகிறது.

அரசு வேலைகள்

பல இளைஞர்கள் பொதுத்துறையில் நுழைவதற்காக நீண்ட காலம் காத்திருப்பது வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகிறது. மிகக் குறைந்த காலிப்பணியிடங்கள் இருப்பதால் இது லாட்டரிச் சீட்டு போன்றே உள்ளது. இந்த விருப்பம் வெறும் வேலை பாதுகாப்பு அல்லது சமூக அந்தஸ்துக்காக மட்டும் ஏற்படுவதல்ல; மாறாகச் சமூக, பொருளாதாரப் பாகுபாடுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் இது தேவையாக இருக்கிறது. பொது நிறுவனங்களில் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதரவு இருந்தால், சேவைகளையும் வாய்ப்புகளையும் பெறுவது எளிது என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது.

குறிப்பாக நலிவடைந்த சமூகப் பிரிவினருக்கு இது மிக முக்கியமானதாகிறது. தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்லாதது, சந்தைகளிலும் நிர்வாக அமைப்புகளிலும் நிலவும் பாகுபாடுகள் என அவர்கள் பல தடைகளைச் சந்திக்கின்றனர். எனவே, அரசு வேலைகளில் தங்களுக்குக் கிடைக்கும் பிரதிநிதித்துவம் அவர்களுக்குப் பாதுகாப்பைத் தருவதோடு, தங்கள் குடும்பங்களையும் சமூகத்தையும் முன்னேற்றவும் உதவுகிறது. எனவே, இளைஞர்களின் வேலைவாய்ப்புச் சிக்கலைத் தீர்க்க வாய்ப்புகளில் சமத்துவம், பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்பு, பொதுச் சேவைகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வது அவசியம் என SWI 2026 அறிக்கை வாதிடுகிறது.

இது பயனுள்ளது என்றாலும், இது முழுமையான சித்திரத்தைத் தரவில்லை. 2016க்குப் பிறகு தனியார் துறையில் விவசாயம் சாரா வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்துள்ளன. அதே வேளையில், உயர்கல்விச் சான்றிதழ்களுடன் தொழிலாளர் சந்தைக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010களின் தொடக்கத்தைவிடத் தற்போது குடிமைப்பணிகள், இரயில்வே, பொதுத்துறை வங்கிகளில் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அல்லது அதற்கு மேலாக அதிகரித்துள்ளது.

ஏற்றத்தாழ்வும் பாகுபாடும்

டிஜிட்டல்மயமாக்கல், AI போன்ற தொழில்நுட்பப் பாய்ச்சல்கள் பெரும்பாலும் அதிக வருமானம் கொண்டவர்களுக்கே சாதகமாக அமைகின்றன. இது தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே, தரமான தொழில்நுட்பக் கல்வியும் திறன் மேம்பாடும் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்.

தொழில்களில் நிலவும் சமூகப் பாகுபாடு குறைந்திருந்தாலும், இன்னமும் பெரும் இடைவெளிகள் நிலவுகின்றன. உதாரணமாக, பட்டியலினச் சமூக இளைஞர்களில் 33.5 சதவீதம் பேர் கூலித் தொழிலாளர்களாகவும், 41 சதவீதம் பேர் சுயதொழில் செய்பவர்களாகவும் உள்ளனர். ஆனால் மற்ற பிரிவினரில் இது முறையே 9.8, 51 சதவீதமாக உள்ளது. கட்டுமானத் துறையிலும் (26%) விவசாயத் துறையிலும் (31%) பட்டியலின இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், நவீன சேவைத் துறைகளில் அவர்களின் பங்களிப்பு வெறும் 12 சதவீதமாக உள்ளது. தரமான கல்வி, நிதி, சொத்துக்கள் ஆகியவை கிடைப்பதில் நிலவும் பாகுபாடே இத்தகைய தேக்க நிலைக்குக் காரணம்.

மாணவர் சேர்க்கை விகிதம் ஒரு பகுதி உண்மையை மட்டுமே சொல்கிறது; நலிவடைந்த சமூகங்களில் இடைநிற்றல் விகிதம் (Dropout rate) இன்னும் அதிகமாகவே உள்ளது. இதன் விளைவாக, 15-29 வயதுக்குட்பட்ட பழங்குடியின இளைஞர்களில் பட்டதாரிகளின் எண்ணிக்கை வெறும் 7 சதவீதமாகவும், பட்டியலினத்தவரிடம் 10 சதவீதமாகவும் மட்டுமே உள்ளது.

இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை களைய, ஆரம்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், பின்தங்கிய பகுதிகளில் உயர்கல்வியை விரிவாக்குதல், நலிவடைந்த பிரிவினருக்குத் தேவையான உதவிகளை வழங்குதல் ஆகியவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பட்டதாரி இளைஞர்களுக்கான ஒரே தீர்வு: அரசாங்கம் வேலையில்லாத காலத்திற்கான நிவாரண நிதியை வழங்குவதை நிறுத்திவிட்டு, அந்த நிதியையும் கூடுதல் நிதியையும் திரட்டி முறைசார்ந்த உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பயிற்சிப் பள்ளிகளை (Apprenticeships) உருவாக்க வேண்டும். 1961ஆம் ஆண்டின் பயிற்சிப் பள்ளிகள் சட்டமும் (Apprentices Act) இதையே வலியுறுத்துகிறது.

கட்டுரையாளர்: சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ஐ.இசட்.ஏ (IZA) தொழிலாளர் பொருளாதார நிறுவனம் (லக்சம்பர்க்) ஹெச்.எஸ்.இ, (HSE) பல்கலைக்கழகம் (மாஸ்கோ) ஆகியவற்றின் வருகைதரு பேராசிரியர்.

நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share