இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை (Katchatheevu) மத்திய அரசு மீட்க வேண்டும் என மதுரை மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசிய விவகாரம் இலங்கையில் பெரும் புயலை வீசிக் கொண்டிருக்கிறது.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய், “தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
விஜய்யின் இந்த கோரிக்கை இலங்கையில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத், ஈழத் தமிழ் மீனவர் அமைப்பினர் என பலரும் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயக பிரதேசமான யாழ்ப்பாணத்துக்கு இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (செப்டம்பர் 1) பயணம் மேற்கொண்டு பல்வ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அநுரகுமார திஸாநாயக்க, ” கச்சத்தீவை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எத்தகைய நெருக்கடிகளுக்கும் அடிபணிய மாட்டேன்” என்றார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கச்சத்தீவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
