ஐசியுவில் வானதி சீனிவாசன்.. தாய்க்காக பிரச்சார களத்தில் இறங்கிய மகன்

Published On:

| By Pandeeswari Gurusamy

vanathi

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் தாய்க்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

கடந்த முறை கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், இந்த முறை தொகுதி மாறி கோவை வடக்கில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 6-ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், அடுத்த நாளே கடும் கால் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது எடுத்துக்கொண்ட மருந்தால் ஏற்பட்ட அலர்ஜி காரணமாக அவர் ஐ.சி.யூ-வுக்கு மாற்றப்பட்டார். 4 நாட்களில் அவர் உடல் நலம் குணமாகலாம் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்த சில நாட்களில் குணமடைந்து பிரச்சாரத்துக்குத் திரும்புவார் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவை வடக்கு தொகுதியில் தனது தாய் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, அவரது மகன் ஆதர்ஷ் கழுத்தில் பாஜக துண்டு அணிந்துகொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். பாஜகவினர் மற்றும் தொகுதி மக்களிடம் பேசும்போது, “அம்மா இன்னும் ரெண்டே நாள்ல வந்துருவாங்க” என்று கூறி வருகிறார்.

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது, கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வரும் ஏப்ரல் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரைக்காக கோவை வர உள்ளார். பிரதமர் வருகைக்கு முன் வானதி சீனிவாசன் உடல் நலம் பெற்று வருவாரா என்பதே பாஜகவினரின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை விட 1,728 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share