சேலம் மருத்துவமனையில் இருந்து சென்னை அழைத்து வரப்படும் ராமதாஸ்.. கொந்தளித்த அன்புமணி

Published On:

| By Pandeeswari Gurusamy

Anbumani

சேலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், உடல் நலக் குறைவு காரணமாக மேடையிலேயே மயங்கி சரிந்தார். சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சென்னை மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் முற்றிய நிலையில், அக்கட்சியினர் இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்து 2026 தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், ராமதாஸ் சசிகலா தொடங்கிய அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியுடன் இணைந்து 2026 தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறார். நேற்று சேலத்தில் தனது தீவிர ஆதரவாளரான அருளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ராமதாஸ் திடீரென உடல் நலக் குறைவு காரணமாக மயங்கி சரிந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சேலத்தில் இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், உயர் சிகிச்சைக்காக இன்று சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்படுகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான சிகிச்சை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையே, விருத்தாச்சலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த அன்புமணியிடம் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது, “ஐயாவிற்கு ஏதாவது ஆச்சு என்றால் இவர்களை நான் சும்மா விட மாட்டேன்” என்று பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியல் அழுத்தம், குடும்ப விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான டாக்டர் ராமதாஸ் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது, அவரது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share