சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்பிஏ படிப்புகளுக்கான அதீதமான முக்கியத்துவம் தந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் (Anantha Nageswaran) தெரிவித்துள்ளார்.

ANI ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் வி. அனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளதாவது:
- மென்பொருள் (Software), கணினி அறிவியல் (Computers Science) மற்றும் எம்பிஏ (MBA) போன்ற துறைகளுக்கு அதீத முக்கியத்துவம் அளித்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது.
- பட்டம் பெற்றவுடன் உயர்கல்வி அல்லது போட்டித் தேர்வுகள் என மட்டுமே சிந்திக்கும் ‘நேரியல்’ (Linear) முறைக்கு மாணவர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- ஏஐ தொழில்நுட்பம் வேலைச் சந்தையை (Job market) முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. முன்பு மனிதர்கள் செய்து வந்த பல வேலைகளை இப்போது ஏஐ எளிதில் செய்துவிடுகிறது.
- செயற்கை நுண்ணறிவால் எளிதில் நகலெடுக்க முடியாத அல்லது மாற்ற முடியாத திறன்களை (Trade Skills) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- சமையல் கலை, ஆலோசனை (Counselling), பராமரிப்பு (Caregiving) மற்றும் விருந்தோம்பல் (Hospitality) போன்ற துறைகளில் AI எதுவும் செய்ய முடியாது. இந்தத் துறைகளில் உள்ள உணர்வுப்பூர்வமான அல்லது தனித்துவமான மனிதச் செயல்பாடுகளை எளிதில் மாற்ற முடியாது.
- எதிர்காலப் பொருளாதாரம் ‘Trade skills’ எனப்படும் தொழிற்திறன்களைப் பெற்றவர்களுக்கே சொந்தமானது.
- சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தொழிற்திறன்களுக்கு அளிக்கும் அதே மதிப்பை இந்தியாவும் அளிக்க வேண்டும்.
- வெல்டிங், பிளம்பிங், தச்சு மற்றும் மின்சார வேலை போன்ற பணிகளை இந்தியா நீண்ட காலமாகத் தாழ்வாகவே கருதி வருகிறது; இந்த மனநிலை மாற வேண்டும்.
- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல White-collar வேலைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
- மனித உழைப்பு தேவைப்படும் வேலைகளுக்கு AI-ஆல் பாதிப்பு ஏற்படாது.
- நண்பர்கள் சமூக ஊடகங்களில் பகிரும் வேலைவாய்ப்பு மற்றும் சம்பளத்தைக் கண்டு இளைஞர்கள் தங்களை ஒப்பிட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாக வேண்டாம்.
- சமையல் கலை போன்ற தனித்துவமான திறன்களைக் கற்றுக்கொண்டவர்கள், அதைத் தாழ்வாக நினைக்காமல் பெருமிதம் கொள்ள வேண்டும்.
- வேலைவாய்ப்பின்மை மட்டுமின்றி, கல்வி இருந்தும் வேலைக்குத் தகுதியற்ற சூழல் (Unemployability) நிலவுவதைத் தீர்க்க வேண்டும்.
- உலகப் பொருளாதாரம் சுருங்கி வரும் நிலையில், இந்தியா தனது உற்பத்தித் துறையின் (Manufacturing) போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டும்.
- பொருளாதாரம் வளருவதற்கு முன்பே இந்தியா ஆரோக்கியமற்ற நாடாக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
- அனைத்து வருமானப் பிரிவினரிடையேயும் உடல் பருமன் அதிகரித்துள்ளது, இது நாட்டின் எதிர்கால உற்பத்தித்திறனைப் பாதிக்கும்.
- அதிகப்படியான உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை, குறைந்த உடல் உழைப்பு மற்றும் தாமதமாக உண்ணும் பழக்கம் ஆகியவை ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன.
- உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் ஒரு நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.
- படிப்புக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட உடல் நலத்திலும் இளைஞர்கள் முதலீடு செய்ய வேண்டும்.
- தொழில்நுட்பத்தால் எளிதில் மாற்ற முடியாத, பிரத்யேகமான மனிதத் திறன்களை வளர்த்துக் கொள்வதே மிகச்சிறந்த பாதுகாப்பான வேலைவாய்ப்புத் திட்டம்.
- பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்ததல்ல; அது ஆரோக்கியமான மற்றும் திறமையான குடிமக்களின் கூட்டு முயற்சி.
- ‘டிகிரி’களை விட ‘திறன்களே’ (Skills) தற்போதைய மாறிவரும் பொருளாதாரச் சூழலில் நிலையான வருமானத்திற்கு வழிவகுக்கும். இவ்வாறு வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
