விளையாட்டிலும் அரசியலை நுழைத்தால் எப்படி முன்னேற முடியும்? என தங்கள் அணியுடன் விளையாட மறுத்த இந்திய அணியின் முடிவுக்கு பாகிஸ்தான் கேப்டன் அஃப்ரிடி எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். shahid afridi compare india by rotten eggs in wcl
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ‘உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்’ தொடர் கடந்த 18ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி இதில் பங்கேற்றுள்ள யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் ஷாகித் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் நேற்று பர்மிங்காமில் மைதானத்தில் மோத இருந்தன.

ஆனால் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்பஜன் சிங், ஷிகர் தவான், யூசுப் பதான் உள்ளிட்ட 9 வீரர்கள், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நேற்று (ஜூலை 20) இரவு நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. இதற்காக ரசிகர்களிடம் WCL நிர்வாகம் மன்னிப்பு கோரியது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி போட்டி ரத்தானது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விளையாட்டிலும் அரசியலை நுழைத்தால் எப்படி?
அவர், “நாங்கள் கிரிக்கெட் விளையாட இங்கே வந்துள்ளோம். அரசியலில் இருந்து கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டில் விலகி இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். அதிலும் அரசியலை நுழைத்தால் எப்படி முன்னேற முடியும்? ஒரு வீரர் ஒரு நல்ல தூதராக இருக்க வேண்டும், அவர்களின் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடாது.
இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட விரும்பவில்லை என்றால், அவர்கள் இங்கு வருவதற்கு முன்பே மறுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கே வந்த பிறகு, பயிற்சி ஆட்டங்களில் கூட விளையாடி விட்டு திடீரென்று ஒரே நாளில் எல்லாவற்றையும் மாற்றியது ஏன்?
உரையாடலே இல்லாதபோது எப்படி தீர்வு கிடைக்கும்? இதுமாதிரியான நிகழ்வுகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளதான் நடக்கிறது. சில நேரங்களில் ஒரே ஒரு அழுகிய முட்டை அனைத்தையும் வீணாக்கும்” என அஃப்ரிடி கடுமையாக சாடியுள்ளார்.
நாங்களும் மறுப்போம்!
தொடர்ந்து பாகிஸ்தான் சாம்பியன்ஸ் உரிமையாளர் கமில் கான் கூறுகையில், ”உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் எந்த மாற்றங்களும் இல்லாமல், தீர்மானிக்கப்பட்ட பட்டியலின் படி தொடரும்.
“மீதமுள்ள அனைத்து போட்டிகளும் திட்டமிட்டபடி எந்த மாற்றங்களும் இல்லாமல் நடந்து வருகிறது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை, நாங்கள் அரையிறுதிக்கு வந்தால், நான்கு அணிகள் இருக்கும். அப்போது இந்தியாவுடன் மோத நேரிட்டால், அந்த போட்டியை தவிர்ப்போம். ஒருவேளை இறுதிப் போட்டிக்கு வந்தால், அது தொடர்பான முடிவுகள் அப்போது எடுக்கப்படும்” எனப் பேசினார்.
