ஐபிஎல் 2026 தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, இன்று நடைபெற்ற 40-வது லீக் PBKS vs RR போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அதிர்ச்சித் தோல்வியைத் பரிசளித்தது. முல்லன்பூரில் நடைபெற்ற விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் அணி 4 பந்துகள் மீதமிருக்கையிலேயே எட்டிப் பிடித்தது.
ஸ்டோய்னிஸ் – பிரப்சிம்ரன் அதிரடி!
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (59) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (29) ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. நடுவரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானம் காட்டினாலும், இறுதியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். வெறும் 22 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் சேர்த்தது.
ராஜஸ்தானின் ‘சூறாவளி’ தொடக்கம்
பிரம்மாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (43) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (51) ஜோடி மின்னல் வேகத் தொடக்கத்தை அளித்தது. பவர் பிளே ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 84 ரன்களைக் குவித்து பஞ்சாப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது. அதன்பின் யுஸ்வேந்திர சாகல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஜெய்ஸ்வால், ரியான் பராக் ஆகியோரின் விக்கெட்டுகளை சாகல் வீழ்த்தியபோது ஆட்டம் பஞ்சாப் பக்கம் திரும்புவது போல் தெரிந்தது.
முடித்தார் பெரைரா – துபே!
இறுதி கட்டத்தில் டொனோவன் பெரைரா மற்றும் இம்பாக்ட் பிளேயர் சுபம் துபே ஜோடி பஞ்சாபின் கனவைத் தகர்த்தது. டொனோவன் பெரைரா வெறும் 26 பந்துகளில் 52 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவருக்குத் துணையாக சுபம் துபே 12 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். 19.2 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 228 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு ராஜஸ்தான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் இந்த வெற்றி ராஜஸ்தான் அணிக்கு முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது.
