அமைச்சராக தொடர விரும்புகிறேனா? – உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி பதில்!

Published On:

| By Selvam

உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவில் அமைச்சராக பதவி வகிக்க தடை விதிக்கப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வமாக இன்று (ஏப்ரல் 8) பிராமண பத்திரம் தாக்கல் செய்தார். Senthilbalaji responds to ED allegations

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

இதையடுத்து செப்டம்பர் 29-ஆம் தேதியே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், அவர் அமைச்சராகி விட்டதால் அவருக்கு எதிரான வழக்கில் தைரியமாக சாட்சி சொல்வதற்கு சாட்சிகள் தயங்குகிறார்கள். எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

கடந்த மார்ச் 24-ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “எழுத்து ரீதியாக பதில் சொல்வதற்கு எங்களுக்கு இன்னும் கால அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதனால் கோபமான உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, “செந்தில் பாலாஜிக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்பவில்லை என்றால் கடந்த சில அமர்வுகளாக இந்த வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞராக நீங்கள் எப்படி ஆஜரானீர்கள்?

இது போன்ற டெக்னிக்கல் விஷயங்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்தோடு விளையாடலாம் என நினைக்காதீர்கள். உங்களுடைய இந்த வாதம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க விரும்புகிறாரா இல்லையா? அல்லது அது பற்றிய அவரது சட்ட ரீதியான விளக்கத்தை ஏப்ரல் முதல் வாரத்துக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்தநிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான பிராமணப்பத்திரத்தில், “உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவில் அமைச்சராக பதவி வகிக்க தடை விதிக்கப்படவில்லை. ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை. மேலும், நான் அமைச்சரானது எந்த சட்டத்திற்கும் முரணானது அல்ல.

ஒரு அமைச்சராக இந்த வழக்கில் சாட்சிகளை மிரட்டுவதாக புகார்தாரர் வித்யாகுமார் எந்தவிதத்திலும் நிரூபிக்கவில்லை. சாட்சிகளை இன்ஃபுளுயன்ஸ் செய்யவில்லை. யாரோ ஒருவரின் வற்பறுத்தலின் காரணமாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீனை திரும்ப பெற அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு உகந்தது அல்ல. இதனால் இந்த மனுக்களை ஆரம்பக்கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Senthilbalaji responds to ED allegations

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share