இந்திய ரூபாய் மதிப்பு குறையாது: ரிசர்வ் வங்கி எடுத்த ஆக்ஷன்!

Published On:

| By Santhosh Raj Saravanan

rupee value will no longer fall with the RBI conducting a swap auction

வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், ரூபாயின் மீதான அதிகரித்து வரும் அழுத்தத்தைக் குறைக்கவும் (Rupee Value) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான டாலர்-ரூபாய் மாற்று ஏலத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த ஏலம் மே 26 ஆம் தேதி ஒரு மணி நேர கால அவகாசத்தில் நடைபெறும். இந்த முயற்சியின் மூலம் வங்கிகள் அமெரிக்க டாலர்களை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைத்து, அதற்கு ஈடாக ரிசர்வ் வங்கியிடமிருந்து இந்திய ரூபாயைப் பெற்றுக்கொள்ளும்.

இது கடன் வழங்குவதற்கும் சந்தைப் புழக்கத்திற்கும் வங்கிகள் எதிர்கொள்ளும் பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும். ரூபாயின் மதிப்பு சரிந்து அந்நியச் செலாவணி சந்தையில் நிலையற்ற தன்மையை அதிகரித்து வரும் நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கி அமைப்பின் நீண்டகால பணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த சில மாதங்களாக நிலவும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FIIs) இந்தியப் பங்குச் சந்தை மற்றும் பிற சொத்துக்களிலிருந்து பில்லியன் கணக்கான டாலர்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் நிதியை இந்தியாவிலிருந்து திரும்பப் பெறும்போது ​​அவர்கள் ரூபாயை டாலராக மாற்றுகிறார்கள். இது சந்தையில் டாலருக்கான தேவையை அதிகரிக்கிறது. இதனால் இந்திய ரூபாய் பலவீனமடைகிறது. இந்த அழுத்தத்தைக் குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி சந்தையில் தலையிட வேண்டியிருந்தது.

சர்வதேச நிலைமைகள் ரூபாயின் மீது குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்கள் இந்தியாவின் இறக்குமதிச் செலவை அதிகரித்துள்ளன. இது, டாலருக்கு எதிராக ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சியை அடைய வழிவகுத்துள்ளது. ஒரு டாலருக்கு 96.96 என்ற நிலைக்கு ரூபாய் சரிந்துள்ளது. இது அதன் வரலாற்றிலேயே மிகவும் பலவீனமான நிலையாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை பல வழிகளில் நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தைப் பராமரிக்கும். வட்டி விகிதங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். மேலும் பத்திரச் சந்தைக்கு ஆதரவளிக்கும். டாலர்-ரூபாய் ஃபார்வர்டு பிரீமியமும் குறையும். 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்வைப் ஏலத்தின் மூலம், வங்கிகளிடம் உள்ள உபரி டாலர்கள் இந்திய ரிசர்வ் வங்கிக்குச் செல்லும். அதற்குப் பதிலாக கணிசமான அளவு இந்திய நாணயம் (ரூபாய்) சந்தையில் நுழையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share